போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான தமிழக அரசின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, நாளை முதல் வேலை நிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகத்தின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை (டிசம்பர் 9) முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன.
இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்தப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடள்ளனர். ஏற்கனவே 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது 3-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், "6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த பேச்சுவார்த்தையில், "எதையும் இப்போது ஏற்க இயலாது. பொங்கலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. முழுக்க முழுக்க நியாயமற்ற பதில் இது. அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாத பதில் இது. ஊழியர்களின் கோரிக்கைகள் மீது இப்போது முடிவு சொல்ல முடியாது என்று அரசு தரப்பும், அமைச்சரும் சொன்னார்கள். அதை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்.
இந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது. தமிழகத்தில் இருக்கிற எந்த துறையிலும், எந்த பொதுத்துறை தொழிலாளிக்கும் இழைக்கப்படாத அநீதியை போக்குவரத்து தொழிலாளிகளுக்கு இந்த அரசு இழைத்துக்கொண்டே இருக்கிறது. பஞ்ச படியை கேட்க எங்களுக்கு அதிகரித்து தர வேண்டும் என்று கேட்கவில்லை, எங்களுக்கு தரவேண்டிய பாக்கியை தான் கேட்கிறோம். எங்களுக்கு அரசு தரவேண்டிய கடன். அரசு 8 ஆண்டுகளாக எங்களுக்கு கடன் பட்டிருக்கிறது. மற்ற கோரிக்கைகள் எல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம், பஞ்சப்படி பாக்கியை மட்டும் கொடுக்க வேண்டும் என்பதே இன்றைய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது. இதையும் பொங்கலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார்கள்.
எதுவும் செய்ய முடியாது என முடிவெடுத்து மிகப்பெரிய தவறை அரசு இழைக்கிறது. எனவே, வேலைநிறுத்தத்தை திரும்ப பெற முடியாது. திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். எங்கள் நிலையைப் புரிந்துகொண்டு மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆறு கோரிக்கையில் இருந்து ஒரு கோரிக்கைக்கு வந்தபின்னும்கூட அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இன்று மாலை வரை நேரம் இருக்கிறது. அமைச்சர் எங்களை அழைத்து பேச தயாராக இருந்தால் நாங்களும் தயார். வேலைநிறுத்தம் என்ற தவிர்க்க முடியாத சூழலுக்கு எங்களை அரசு தள்ளியுள்ளது" என தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.