போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம், ஜனவரி 19 ஆம் தேதி வரை தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகத்தின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்ற (டிசம்பர் 9) முதல் வேலை நிறுத்தம் செய்தன.
இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் பட்டாபி ரகுராமன் ஆஜராகி முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது, அப்போது “வேலை நிறுத்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் அரசுக்கும் தொழிற்சங்களுக்கும் என்ன பிரச்சனை உள்ளது” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு தரப்பில், “பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்து நிறைவு பெறாத நிலையில் மீண்டும் ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, தொழிற்சங்கங்கள் சட்டவிரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்று பதிலளிக்கப்பட்டது. அதேநேரம் தொழிற்சங்கங்களின் தரப்பில் “கோரிக்கைகளை ஏற்காததால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்” என்று தெரிவிக்கபட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின்போது வேலைநிறுத்தம் செய்து மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள்தான். நகரத்தில் உள்ள மக்கள் அதிகமாக பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். போராட்டம் நடந்த வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்” என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்குள் அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்று மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில், மதியம் விசாரணைக்கு வந்தப்போது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில், வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். ஜனவரி 19 ஆம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து நாளைக்கு பணிக்குத் திரும்புவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உறுதியளித்தன.
இதனையடுத்து, பணிக்கு திரும்பி வரும் போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஜனவரி 19 ஆம் தேதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டார்கள் என நம்புவதாக கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“