திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன், பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்க்கொள்ள திருச்சி மாநகர் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த (18.12.22)-ம் தேதி திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சை நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் அருவாளை காட்டி மிரட்டி மது பாட்டில்களை கொள்ளையடித்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
தனிப்படையினரின் புலன்விசாரணையில் சந்தேக நபர்களின் நடவடிக்கைளை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் விபரங்களை சேகரித்தும், பாலக்கரை பகுதிகளில் சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் சந்தேகத்திற்குகிடமான வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இரண்டு நபரை நிறுத்தி விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், பாலக்கரையை சேர்ந்த ஜீட் ஆண்டனி மற்றும் ஒரு நபர் ஆகியோர் மதுபான கடையில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் பட்டாக்கத்தை காண்பித்து டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை பறித்து சென்றதும் இவர்கள்தான் என்பதையும் ஒத்துக் கொண்டனர்.
இதேபோல் காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் புகுந்து ஆயுதத்தை காண்பித்து மது பாட்டில்களை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil