Tamil Nadu urban local body elections 2022 : வருகின்ற 19ம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளும், தொண்டர்களிடம் தலைவர்களின் ஆலோசனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கின்ற இந்த நிலையில் அக்கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் மாறி குற்றம் சுமத்தும் காட்சிகளும் அரங்கேறி வருகிறது.

9 மாதங்கள் தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடைபெற்று வருகிறது என்று சேலம் மாவட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியை குற்றம் சுமத்தினார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது. நிர்வாகத்திறன் ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறினார் அவர். மேலும் முதல்வர் சைக்கிள் ஓட்டுவதும், டீ குடிப்பதும் என விளம்பர அரசியல் செய்து கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்வதைக் கூட டிவியில் ஒளிபரப்புகின்றனர். மக்கள் பிரச்சனையை கவனிக்காமல் தன்னுடைய சொந்த வேலையை பார்க்கிறார் முதல்வர் என்று குற்றம் சுமத்தினார் எடப்பாடி பழனிசாமி.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மதுரையில் இஸ்லாமியர்களை களம் இறக்கிய பாஜக
நீட் விவகாரம் குறித்து நாங்கள் விவாதிக்க தயார் என்று முதல்வர் முக ஸ்டாலினின் சவாலிற்கு பதில் அளிக்கும் வகையில் காலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. நீட் விவகாரத்தில் அதிமுக மேற்கொண்ட முயற்சியை மறந்து முதல்வர் பேசுவதாக குறிப்பிட்டார். நாட்டின் 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைத்தும், தமிழகத்தில் குறைக்கப்படாதது ஏன் என எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டம் கே.புதூரில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.
திமுக அரசு மக்களை நம்பி ஆட்சி நடத்தவில்லை. பணத்தை நம்பியே ஆட்சி நடத்துகிறது. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆக முடியும் என்பதற்கு நானே உதாரணம் என்று இன்று திண்டுக்கலில் பரப்புரையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியை விமர்சனம் செய்தார்.
கொரோனாவா.. அப்டினா என்ன…? பிரசாரத்தின்போது காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!
கடந்தம் 6ம் தேதி தன்னுடைய பிரச்சாரத்தை கோவையில் துவங்கினார் முதல்வர். தொடர்ந்து அவர் சேலம், கடலூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஈரோட்டில் நடைபெற்ற டிஜிட்டல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அவர், “தமிழகத்தில் நுழைவுத்தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கலைஞர் கருணாநிதி” என்று தெரிவித்தார். மேலும், தமிழகர்களின் நலனைக் காக்கவே திமுக உருவாக்கப்பட்டது. நவீன தமிழகத்தை இக்கட்சி உருவாக்கியுள்ளது. இனியும் இந்த அரசு மக்களின் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக நிறைவேற்றி வைக்கும்.

நீட் தேர்வை திமுக, காங்கிரஸ் கொண்டு வந்ததாக அதிமுக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறது. நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தாலும், எடப்பாடியார் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் நீட் தேர்வு அமலுக்கு வந்தது என்று கூறினார். தமிழகத்தில் இனி நிரந்தரமாக தி.மு.க. ஆட்சிதான் என்ற நிலை உருவாகும். நான் நிரந்தர முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல ஆனால் திமுக தமிழர்களின் உணர்வோடு உருவான இயக்கம் என்பதற்காக திமுக ஆட்சி தான் இனியும் தொடரும் என்று பேசினார் முதல்வர்.
தமிழகத்தில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது. இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார். நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா? என்று எதிர்க்கட்சியினரை பார்த்து கேள்வி கேட்டு பிரச்சாரம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தூத்துக்குடி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய உரையில், பாஜகவையும் பிரதமரையும் விமர்சனம் செய்தார் முதல்வர். சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை மதிப்பதிலும் போற்றுவதிலும் தமிழகம் யாருக்கும் சளைத்தது அல்ல. ஆனால் தமிழகத்தின் நாற்றுப்பட்டுக்கு மோடி சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்று கூறினார்.
”மக்களுக்கு சாப்பிட ரொட்டி கிடைக்காத போது கேக் வாங்கி சாப்பிடட்டும் என்று ராணி ஒருவர் சொன்னது போல், துப்பாக்கிச்சூட்டினை நான் தொலைக்காட்சி பார்த்தே தெரிந்து கொண்டேன் என்று கூறியவர் தானே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் சர்வாதிகாரி தானே என்றும் கேள்வி எழுப்பினார் முதல்வர். ஆட்சி அமைத்த 8 மாதங்களின் 5 முறை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. சட்டமன்றங்களில் ஆளும் கட்சியினரைக் காட்டிலும் எதிர்க்கட்சியினரே அதிக நேரம் பேசுகின்றனர் இதைவிட ஒரு நல்ல ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய முதல்வர், எடப்பாடி பழனிசாமி என்னை பொம்மை என்று கூறியுள்ளார். மக்கள் அளித்த தோல்வியால் உறைந்து போன அவர் எதைப் பேசுகிறோம் என்று தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் குற்றம் சுமத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil