Tamil Nadu urges Cauvery panel : டெல்லியில், வெள்ளிக்கிழமை அன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம் ஆன்லைனில், ஆணையர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டார். அவருடன் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், குழு உறுப்பினர் பட்டாபிராமன், நீர்வளத்துறை துணைச் செயலாளர் பரி ஆகியோர் பங்கேற்றனர்.
மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. கர்நாடக அரசு சார்பில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதுஅ. ஆனால் இதற்கு தமிழ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் இது குறித்து விவாதிக்கக் கூடாது என்று கூறினர். ஏற்கனவே செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்த ஆணையத்தின் 14வது கூட்டத்திலும் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் தமிழக அதிகாரிகள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த கூட்டத்தில் மேகதாது விவாதம் நடைபெறவில்லை.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், வருகின்ற ஆண்டு தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று கூறினார். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கடந்த 2018 ஜூன் 1ம் தேதி அமைக்கப்பட்டது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கர்நாடக சார்பில் அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங்கும், கேரளாவின் கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே. ஜோஸ் ஆகியோரும் பங்கேற்றனர். புதுச்சேரி சார்பாக பொதுத்துறை தலைமை பொறியாளர் வி. சத்யமூர்த்தி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
மேகதாது விவகாரம் குறித்து பேசிய போது, ”மேகதாது திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது நமக்கு யாருக்கும் தெரியாது. எனவே கர்நாடகா சார்பில் அதன் சிறப்பு அம்சங்களை விளக்க அனுமதி வழங்க வேண்டும். அதன் பின்னர் மற்ற மாநிலங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்பது தொடர்பாக அவர்களின் கருத்தை முன்வைக்கலாம். இதற்கு ஒரு நாள் தேவைப்படும். ஆனாலும் இந்த முறை ஏதுவானதாக இருக்கும். நீதிமன்றத்தின் முன்பு இந்த விவகாரம் இருந்தாலும் கூட இது குறித்து விவாதிக்க தேவையான சட்ட உதவிகளை பெறலாம்” என்றும் இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த சௌமித்ரா குமார் ஹால்தர் குறிப்பிட்டுள்ளதாக அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil