/indian-express-tamil/media/media_files/2025/08/30/tamil-nadu-vanigar-sangangalin-peramaippu-president-am-vikramaraja-protest-against-multinational-retail-company-d-mart-tamil-news-2025-08-30-17-18-21.jpg)
இந்தியாவில் சில்லரை வணிகத்தில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் சிறுகுறு, நடுத்தர வணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டத்திற்கு மாற்றாக சுயதொழில் என்ற அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சில்லரை வணிகம் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றது. மேலும், சிறுகுறு நடுத்தர வணிகர்களின் வருவாய் ஆதாரமாகவும், வாழ்வாதாரமாகவும் சில்லரை வணிகம் விளங்கி வருகின்றது.
இந்த நிலையில், அண்மைக்காலமாக அகில இந்திய அளவில் பெருகி வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான அறிவிப்புகள், ஏராளமான சலுகைகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்து வருகின்றன. இதனால் சிறு -குறு நடுத்தர வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏராளமானோர் தங்கள் வணிகத்தை இழந்து மாற்று வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் மேற்கண்ட நடவடிக்கைகள் இந்திய சில்லறை வணிகர்களுக்கு எதிரான தீவிரவாதம் என்றே கருத வேண்டியுள்ளது. இதில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திருச்சியில் ஏற்கனவே 2 இடங்களில் மிகப்பெரிய அளவில் இயங்கி வருகின்றது. தற்போது இதே திருச்சியில் 3-வது கிளையை 1,50,000 சதுர அடி பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்க ஆயத்தமாகி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஏறதாழ 30 லட்சம் சில்லரை வணிகர்கள் சிற்றூர் முதல் நகரம் வரை பரந்து விரிந்து சுமார் 1 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய வணிக குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும், திருச்சியில் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம் நடத்துவது என பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று சனிக்கிழமை திருச்சியில் கார்ப்பரேட் நிறுவனத்தின் 3- வது கிளை அமைய உள்ள வயலூர் ரோடு வாஸன் வேலி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் மாபெரும் அடையாள முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார். மாநில தலைமை நிலைய செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார்.
முற்றுகை போராட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:-
கார்ப்பரேட் கம்பெனிகளின் சில்லரை வணிக ஆதிக்கத்தினால் சிறு,குறு அடித்தட்டு வணிகர்களுக்கு வருவாய் இழப்பு, வாழ்வாதார இழப்பு ஏற்பட்டு வருமை நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்கும் விதமாகவும் சில்லரை வணிகத்தை பாதுகாக்கும் விதமாகவும் முதற்கட்டமாக இவ் அடையாள முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களால் சில்லறை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட, அவர்கள் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, உள்ளூர் வணிகத்தை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
டி மார்ட் நிறுவனங்களுக்கு மொத்த விற்பனை செய்ய தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதுவும் அந்த நிறுவனங்கள் நகர்புற பகுதிகளுக்கு வெளியே தான் இருக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய லாபியை பயன்படுத்தி விதிகளை மீறி வருகிறார்கள். இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் தமிழகத்தில் 20 விழுக்காடு சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. டி மார்ட் போன்ற ஒரு நிறுவனம் ஒரு பகுதிக்கு வந்தால் அதை சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள வியாபாரிகள் 8 முதல் 9 மாதங்களில் முழுமையாக அழிந்து விடுகிறார்கள்.
எனவே, மத்திய -மாநில அரசுகள் சட்ட விதிகளில் உரிய மாற்றம் செய்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சில்லரை வணிக ஆதிக்கத்தை அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும். உரிய தீர்வு ஏற்படாத பட்சத்தில் டி-மார்ட் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் முற்றுகையிடும் போராட்டம் மிகத் தீவிரமாக விரைவில் மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமா ராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று திரும்பிய பிறகு அவரை நேரில் சந்தித்து சில்லறை வணிகர்களை பாதுகாக்க டி மார்ட் போன்ற நிறுவனங்களை தமிழ்நாட்டில் வரவிடாமல் தடுக்க மீண்டும் பேசி விவாதிக்க உள்ளோம். வால்மாற்று நிறுவனத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மூடியது போல் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் டி மார்ட் நிறுவனங்களை தமிழ்நாட்டில் வரவிடாமல் தடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் ஆட்சி மன்ற குழுவை கூட்டி அவர்கள் காட்டும் திசையில் வாக்களிக்க முடிவு செய்வோம், தற்பொழுது ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அது தொடர்பாக மத்திய நிதி அமைச்சரை சந்திக்க உள்ளோம். இந்த வரி விகித மாற்றத்தினால் பொருட்கள் விலை குறையும். சில்லறை வணிகர்களை பாதுகாக்க எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் பார்த்து ஆதரவு திரட்ட உள்ளோம். விரைவில் தமிழகத்தில் முழுவதும் ஒட்டுமொத்தமாக கடைகளை அடைத்து போராடும் அளவிற்கு அடுத்த கட்ட முடிவு ஆலோசித்து எடுப்போம் என தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.