துணைவேந்தர் நியமன ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுனரை சந்தித்து வலியுறுத்துவோம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 8) பகல் 1.25 மணிக்கு சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி அரசு மீதான ஊழல் புகார் தொடர்பாக ஆளுனரிடம் ஏற்கனவே மனு கொடுத்திருக்கிறோம். நீதிமன்றத்திலும் வழக்கு போட்டிருக்கிறோம். ஆளுனரை சந்தித்து பலகலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும் கூறியிருக்கிறோம்.
இப்போது சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் ஆளுனரே பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதை குறிப்பிட்டிருக்கிறார். இது வேடிக்கை அல்ல, வேதனையானது. அதாவது, நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுனரே ஒப்புதல் வாக்குமூலமாக வழங்கியிருக்கிறார். துணைவேந்தர் நியமன ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுனரை சந்தித்து கோரிக்கை விடுக்க நேரம் கேட்டிருக்கிறோம். ஒப்புதல் கிடைத்ததும், அவரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்
திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலை சந்திக்க அதிமுக அரசு பயப்படுவது வெளிப்படையாக தெரிகிறது. அதனால்தான் தலைமைச் செயலாளரே அதிமுக.வின் கொள்கைப்பரப்பு செயலாளராக மழையை காரணம் காட்டி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேட்டியின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.