வக்பு வாரிய திருத்த சட்டம்: ஆய்வு நடத்த தொடக்க புள்ளியாக தமிழக கிராமம்; எப்படி தெரியுமா?

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்படுவதற்கு தொடக்க புள்ளியாக தமிழகத்தில் உள்ள ஒரு கிராமம் அமைந்துள்ளது. அது குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்படுவதற்கு தொடக்க புள்ளியாக தமிழகத்தில் உள்ள ஒரு கிராமம் அமைந்துள்ளது. அது குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Trichy village

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், திருச்செந்துறை கிராமத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான சந்திரசேகர சுவாமி கோயிலில் உள்ளூர் திருவிழா இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது என்று ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் டி.கே. பாலசுப்பிரமணியன் கூறுகிறார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: In Tamil Nadu village named as case study for Waqf law, support for new Act

 

Advertisment
Advertisements

கிராமத்தின் அக்ரஹாரத்தில் (பிராமணர் குடியிருப்பு) உள்ள தனது வீட்டு திண்ணையின் (வராண்டா) மீது அமர்ந்த பாலசுப்பிரமணியன் , "இனி கிராமத்தில் உள்ள கோயில்கள் வக்பு வாரியத்தால் உரிமை கோரப்படாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த முறை கோயில் திருவிழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது" என்று கூறினார்.

900 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் திருச்செந்துறை கிராமம் தான், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு 'கேஸ் ஸ்டடி' (Case Study)-ஆக அமைந்தது என்று  மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, கடந்த 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கூறினார். மேலும், திருச்செந்துறை கிராமம் மற்றும் கோயில் ஆகியவை வக்பு சொத்தாக உரிமை கோரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 4 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்தம்) சட்டம், 2025, ஏப்ரல் 8 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம் "அரசியலமைப்புக்கு எதிரானது" என்றும், முஸ்லிம் சமூகத்தின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தாக்குதல் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், அக்ரஹார மக்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர்.

இந்த சர்ச்சை குறித்து தமிழ்நாடு வக்பு வாரிய அதிகாரி ஒருவரிடம், இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்வி எழுப்பியது. அதற்கு, "முழு கிராமத்திற்கும் உரிமை கோரவில்லை" என்று அவர் பதிலளித்தார்.

மேலும், "18 ஆம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் முஸ்லிம்களுக்கு நன்கொடையாக வழங்கிய கிராமத்தின் ஒரு பகுதி மட்டுமே வக்பு நிலத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு அரசிதழின்படி இந்த கிராமம் இனாம் கிராமமாக (பரிசு நிலமாக) கருதப்படுகிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அக்ரஹாரத்தைச் சேர்ந்த கண்ணன் வெங்கடராமன் என்பவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். "நான் பரம்பரை பரம்பரையாக அக்ரஹாரத்தில் வசித்து வருகிறேன். இந்த கிராமம், இனாம் கிராமம் என்ற பிரச்சனை இதுவரை எழுப்பப்படவில்லை" என்று அவர் கூறுகிறார்.

வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சாதியைச் சேர்ந்த இந்துக்கள், திருச்செந்துறை கிராமத்தில் அதிகளவு வசிக்கின்றனர். இங்கு உள்ள அக்ரஹாரத்தில் சுமார் 40 குடும்பங்கள் வசிக்கின்றனர். நிலம் மீதான வக்பு வாரியத்தின் உரிமைக்கோரலுக்கு எதிரான போராட்டங்களுக்கு, அக்ரஹாரம் மையமாக அமைந்தது.

ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜகோபால் தனது 1.2 ஏக்கர் நிலத்தை விற்க முடிவு செய்த பிறகு, திருச்செந்துறை கிராமத்தில் உள்ள இந்த பிரச்சனை முதலில் 2022 இல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்பதால், அவர்களிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழை பெற வேண்டும் என கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இது குறித்த உண்மைத் தன்மையை அறிய வருவாய் அதிகாரிகளை, இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகியது. ஆனால், அவர்களிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

"ராஜகோபால் வழக்கு, முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அக்ரஹாரவாசிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்" என்று கண்ணன் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் தமிழக அரசு இந்த சர்ச்சையில் தலையிட்டது. மேலும், நில பரிவர்த்தனைகளுக்கு வக்பு வாரியத்திடமிருந்து தடையில்லா சான்று பெற தேவையில்லை என்று வருவாய்த் துறை கூறியதை தொடர்ந்து, ராஜகோபால் தனது நிலத்தை விற்பனை செய்தார்.

"கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு, நான் அக்ரஹாரத்தில் சொத்து வாங்கியபோது, ​​வக்பு வாரியத்திடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை. நாங்கள் அதன் குத்தகைதாரர்கள் என்று வாரியம் கூறினாலும், நாங்கள் இதுவரை எந்த வாடகையும் செலுத்தவில்லை" என்று வெங்கட்ராமன் கூறுகிறார்.

"ஏழு தலைமுறைகளாக இங்கு வசிக்கிறோம். ஏறத்தாழ, இந்த அக்ரஹாரத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் தமிழ்நாடு வக்பு வாரியத்துடன் நிலத் தகராறில் ஈடுபட்டுள்ளன" என்று பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தங்கள் நிலத்தின் மீதான தங்களுடைய உரிமைகளை ஆதரிப்பதற்காக, முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ ஹெச். ராஜாவிற்கு, ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி தெரிவித்துள்ளார். "வக்பு வாரிய திருத்த சட்டம் அமலுக்கு வருவதால், இனி நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அக்ரஹாரத்திலிருந்து 900 மீட்டர் தொலைவில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வசிக்கும் நில உரிமையாளரான முகமது மீரான், வக்பு வாரிய திருத்த சட்டத்தின் நுணுக்கமான விவரங்கள் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

"வக்பு வாரியத்தால் கிராமத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. கிராமத்தில் உள்ள எங்கள் நிலம் எங்களுடையது. வக்பு வாரியம் அதை உரிமை கோர முடியாது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, இந்த சர்ச்சையை தீர்த்தால் அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் சேர்க்கப்படுவார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. நான் அதை எதிர்க்கிறேன்" என்று மீரான் கூறியுள்ளார்.

கிராமத்தில் ஒரு மசூதியும், மதரஸாவும் மூடப்பட்டு காணப்பட்டாலும், வழக்கமான வேலைகள் நடைபெறுவதாக உள்ளூர் தலைவர்கள் கூறுகின்றனர்.

"வக்பு சொத்துகளுக்கு எதிரான பா.ஜ.க-வின் பிரசாரத்தால் நாங்கள் கவலைப்படவில்லை. இந்த கிராமத்தில், அனைவருக்கும் சொந்த நிலம் உள்ளது" என்று மசூதி பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்த விவசாயி ராஜகோபால் தற்போது உயிரோடு இல்லை. "ஓராண்டுக்கு முன்பு ராஜகோபால் இறந்து விட்டார். நிலத்தை விற்று தன்னுடைய மகளுக்கு அவர் திருமணம் செய்து வைத்தார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் யாரும் இங்கு வசிக்கவில்லை" என்று அவருடைய நண்பர் ஒருவர் தி இந்திய எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

waqf board bill

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: