Tamil Nadu water scarcity Issue : தமிழக அரசு கூடுதலாக 2400 மில்லியன் லிட்டர் நீரை பொதுமக்கள் தேவைகளுக்காக விநியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. முந்தைய காலக்கட்டங்களை விட அதிக அளவில் விநியோகம் செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இது குறித்து கூறுகையில் 2017ன் ஒப்பிடுகையில் மழையின் அளவு 62% குறைந்துள்ளது என்றும் 450 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு பதிலாக தினமும் 520 லிட்டர் விநியோகம் செய்வதாகவும் அறிவித்திருந்தார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் மற்றும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுவதால் அண்டை மாவட்டங்களில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
குடிப்பதற்கான நீர் மட்டுமல்லாமல் இதர தேவைகளுக்கும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்களின் இந்த தேவையை சென்னை மெட்ரோவால் பூர்த்தி செய்ய இயலவில்லை என்பதால் மக்கள் தனியார் குடிநீர் விநியோகஸ்தர்களையும் டேங்கர் லாரிகளையும் புக் செய்து வருகின்றனர்.
மெரினாவிற்கு அருகே கை - பம்புகள் வைத்து நிலத்தடி நீரை மக்கள் எடுத்து வருகின்றனர். ஆனால் அதில் அதிக அளவு மாசுகள் இருப்பதால் அதனை குடிநீராக பயன்படுத்த இயலவில்லை என்று மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
உணவகங்கள், உணவு விடுதிகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் மதிய உணவுகள் தயாரிப்பதையே நிறுத்திவிட்டனர்.
ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெரும்பாலான ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். கழிவறைகளில் நீரை அளவாக உபயோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி துறை அமைச்சர் தண்ணீர் பற்றாக்குறையால் தான் ஐ.டி. நிறுவனங்கள் இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டினை ஏற்க மறுத்துவிட்டார். வீட்டில் இருந்து வேலை செய்வது ஐ.டி. நிறுவனங்களில் நடைமுறையில் இருக்கும் ஒன்று தானே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி. வேலுமணி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி அவரை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீர் நிலைகளை முறையாக பராமரிக்காமல் விட்டதன் விளைவு தான் இந்த பற்றாக்குறைக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காவிரியுடன் கோதாவரியை இணைப்பது மற்றும் நீர் நிலைகள் பராமரிப்பிற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மேலும் படிக்க : ‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை