Tamil Nadu Weather Forecast : டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையே இதற்கு காரணம்!
தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நேற்று (டிசம்பர் 22) கூறினார்.
நீலகிரி, கோவை உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது. தென் மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கையிலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்தை மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு வெள்ளச் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுகிறதா, வலு இழக்கிறதா? என்பது அடுத்தடுத்த நகர்வுகளில் தெரியும்.
கஜ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களிலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியிருக்கிறது. மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற் பகுதிகளுக்கு நாளை முற்பகல் வரை செல்ல வேண்டாம் என குறிப்பிட்டு கூறப்பட்டிருக்கிறது.
Tamil Nadu Weather Forecast : சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை
பெதாய் புயலின் போது, வட தமிழக கடற்கரைப் பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மழை பெய்யாமல் போனது அனைவருக்கும் பெரும் வருத்தத்தை உருவாக்கியது.
மழை இல்லாமல் போனால், வருகின்ற கோடை காலத்தை சமாளிப்பது மிகவும் கடினம் என்ற நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சென்னை வாசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.