Tamil Nadu Weather Forecast Updates: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் தணிந்து விட்டது.
மே மாத இறுதியிலிருந்தே தமிழகத்தின் மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் தென் தமிழகத்திலும் அது நீட்சி பெற்றது. இருப்பினும் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் போன்ற வட தமிழக மாவட்டங்களுக்கு மழை ஒரு எட்டா கனியாகவே இருந்தது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய பிறகு இந்நிலை மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கமும், அனல் காற்றும் குறைந்தபாடில்லை. கூடவே தண்ணீர் பிரச்னையும் சேர்ந்துக் கொண்டது. இதனால் மழையின் தேவை அதிகரித்தது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு வானிலை மாறி, வெப்பம் தணிந்தது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல சென்னையிலும் மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் சில பகுதிகளில் இன்னும் தூறல் கூட போடாமல் இருக்கிறது.
சென்னையில் இன்றும் மழை உண்டு : வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில், சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9.30 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், “தமிழக வானிலையைப் பொறுத்தவரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலுார், விழுப்புரம், கடலுார், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் பகுதியில் தீவிரமாகியுள்ளது. தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில், வெப்பச்சலன மழை பெய்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், நள்ளிரவில் இட்ட முகநூல் பதிவில், ’சென்னையின் வடக்குப் பகுதிகள் மழையைப் பெற்று வருகின்றன. முக்கியமாக செம்பரம்பாக்கம், மாங்காடு ஆகியப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சீக்கிரம் சென்னையின் மற்ற பகுதிகளும் இந்த மிட்நைட் பார்ட்டியில் (மழை) இணைந்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சென்னை வானிலை மையம், “வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறையும்” எனவும் தெரிவித்துள்ளது.