Tamil Nadu Weather Forecast Updates: சென்னையின் அசோக் நகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை : தென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது; அடுத்த சில மணி நேரங்களுக்கு இது நீடிக்கும் நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவ மழை சமயமான இந்நேரத்தில் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
அதோடு வெகுநாட்களாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வட தமிழக மக்களையும் மகிழ்வித்திருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் மேற்கு பருவ மழை, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில், தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பருவ மழை பெய்கிறது.
இதற்கிடையே திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலுார், விழுப்புரம், கடலுார், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் காரைக்காலில் இன்று லேசானது முதல், மிதமானது வரையில் மழை பெய்யும். தவிர, 30-ம் தேதி வங்கக் கடல் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில குறிப்பிட்ட இடங்களில் லேசான மழை பெய்யும். குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸாகவும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்ஸியஸாகவும் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு முதல் தூறல் மற்றும் லேசான மழை பெய்துள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.