Tamil Nadu News: தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள பல ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிலிருந்து நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழையும், பாரூர், காவேரிப்பாக்கம் பகுதிகளில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, நெடுங்கல், ஏத்தாப்பூர் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், தேவாலா, வெம்பாக்கம், திருப்பத்தூர், ஜம்புகுட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும், தாளவாடி, சின்னக்கல்லார், ஆரணி, குமாரபாளையம், நடுவட்டம், பார்வூட் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும், திருப்பத்தூர், சூளகிரி, ஈரோடு, தம்மம்பட்டி, தேக்கடி, பையூர், ரெட் ஹில்ஸ், வால்பாறை, சூரங்குடி, கெத்தண்டப்பட்டி, செருமுல்லி ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தமிழகத்திற்கு மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்யும் வாய்ப்பு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருக்கிறது. சுற்றியுள்ள இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையின் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க வாய்ப்புள்ளது.
குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக்காற்று வீச வாய்ப்பு உள்ளது. கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால் 28ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், சென்னையில் தற்போது அண்ணா நகர், செனாய் நகர், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், சித்தரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
இதனால், சென்னை மாநகருடைய பிரதான சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறதனால், மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
இதைத்தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகை, பெரம்பலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரங்களுக்கு பரவலான இடியுடன் கூடிய மழைபெய்யும் வாய்ப்பிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil