Northeast Monsoon 2019, Weather Forecast: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது.
Advertisment
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
சென்னை வானிலை மைய அறிவிப்பில், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இரு தினங்களுக்கு முன்னர் இங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த மாவட்டங்களில் மழை சற்று குறைந்திருப்பதாக தெரிகிறது. தவிர, தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மழை பெய்தது?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்தது. நாகை மாவட்டத்தில், திட்டச்சேரி , திருமருகல் ,சீயாத்தமங்கை, திருகண்ணபுரம் , திருப்புகலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி, மாம்பட்டு, பாதிரி, சென்னாவரம், பிருதுார் உட்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மதுரை மாநகரில் ஆரப்பாளையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, திம்மாவரம், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இது தவிர, சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.