Tamil Nadu Weather Forecast: (டிசம்பர் 10ஆம் தேதி) இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
![publive-image publive-image](https://indianexpress.com/wp-content/uploads/2022/08/anigif98765.gif)
நேற்று (டிசம்பர் 9ஆம் தேதி) தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல், நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து, இன்று காலை (டிசம்பர் 10ஆம் தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து வடதமிழக பகுதிகளில் நிலவுகிறது.
டிசம்பர் 11ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனீ, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தரைக்காற்று எச்சரிக்கை:
இன்று வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்காக எச்சரிக்கை:
டிசம்பர் 10ஆம் தேதியான இன்று வடதமிழகம், புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் லட்சத்தீவு பகுதிகள், கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 14ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil