Tamil nadu Weather Updates: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்றும் அங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இதனால் அங்கிருக்கும் ஆறு, குளங்கள் நிரம்பியதோடு, விவசாயிகளையும் மகிழ்ச்சி கொள்ள செய்தது.
இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திர பிரதேசத்தின் கடற்கரையோர பகுதிகளிலும் இன்றும் நாளையும் இடி, மின்னல் மற்றும் 30-40 கி.மீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களில் வெப்பக் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
மேற்கூறிய இடங்களில் வசிப்பவர்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்ஸியஸ், குறைந்த பட்சமாக 31 டிகிரி செல்ஸியஸ் பதிவாகும்.
15-ம் தேதிக்குப் பிறகு சென்னையின் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து, மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.