Tamil nadu Rains: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
நேற்று (டிசம்பர் 26ஆம் தேதி) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிசம்பர் 27ஆம் தேதி) வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, டிசம்பர் 27ஆம் தேதி: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 31ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்காக எச்சரிக்கை:
டிசம்பர் 27ஆம் தேதி கேரள கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil