TN Weather: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நவம்பர் 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருந்தது.
ஆனால், இன்று (நவம்பர் 17ஆம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள கூறிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடல்மட்டத்தில் 7.6 கிலோமீட்டர் உயரத்தில் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்ந்து மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக, வருகின்ற நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சற்றுமுன் கிடைத்த வானிலை அறிக்கையின் படி, இன்று (17.11.2022) மற்றும் (18.11.2022) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(19.11.2022) அன்று கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(20.11.2022) அன்று தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
(21.11.2022) அன்று தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடஙக்ளில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
நவம்பர் 17ஆம் தேதியான இன்று அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நவம்பர் 18ஆம் தேதியன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நவம்பர் 19ஆம் தேதி இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.