Tamil Nadu Weather Forecast Updates: தமிழகத்தில் வெப்பம் தணிந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவ மழையின் தாக்கம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வெப்பம் தணிந்துள்ளது. சென்னை, வேலூர் போன்ற வட தமிழக மாவட்டங்களில் 41 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்திலிருந்து 37 டிகிரியாக குறைந்துள்ளது.
இன்றைய வானிலையைப் பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலுார், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
சென்னையை குளிர்வித்த மழை
கடந்த வாரமே சென்னையில் மழை பெய்யத் தொடங்கிவிட்டாலும், நகரின் பல பகுதிகளில் மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவியது. ஆனால் நேற்று மாலை சென்னை மற்றும் அதன் சுற்று புறங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் மாநகரம் குளிர்ந்ததோடு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.