Tamil Nadu Weather: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னைக்கு மழை இன்னும் எட்டா கனியாகவே உள்ளது. இந்நிலையில் வார இறுதியில் மழை பெய்யலாம் சென்னை வானிலை மையம் முன்பு அறிவித்திருந்தது. குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை மக்களின் ஒரே நம்பிக்கை மழை மட்டும் தான்.
இதற்கிடையே சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சேலம், கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்” எனத் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே நேற்று திருத்தணியில், 42 டிகிரி செல்ஸியஸ், சென்னை, மதுரை, வேலுாரில், 41 டிகிரி செல்ஸியஸ் வெயில் பதிவானது.
கடலுார், நாகை, பரங்கிப்பேட்டை, திருச்சி, 39; பாளையங்கோட்டை, 37 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. குறைந்தபட்சமாக, கொடைக்கானலில், 20 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.