Northeast Monsoon 2019, Weather Forecast: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழையான இது, ஒருபுறம் மகிழ்ச்சியளித்தாலும், அதிக மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுதல், மண்சரிவு போன்றவற்றால் மறுபுறம் கவலையளிக்கிறது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு மத்திய வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மழை தொடரும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதி தீவிர கனமழை
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை முதல் அதி தீவிர கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பதிவு
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை பாம்பன், மண்டபம் பகுதியில் தலா 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் தலா 17 சென்டி மீட்டர் மழையும், காரைக்கால், புதுக்கோட்டை, அறந்தாங்கியில் தலா 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சேலம் மோகனூரில் 10 சென்டி மீட்டரும், மாமல்லபுரம், பெருஞ்சானி, தரங்கம்பாடியில் தலா 8 சென்டி மீட்டரும், தஞ்சையில் 7 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. பவானிசாகர், இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வானிலை மையம் தகவல்
சென்னை வானிலை மையம் இன்று காலை 8.30-க்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும் என்றும் 28 முதல் 31 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இருந்ததைவிட வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு குறைவாக பெய்யும் எனவும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் லேசான மழையும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.