Tamil Nadu Weather Forecast : சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மன்னார்வளைகுடா பகுதியில் கடந்த 33 மணி நேரமாக நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Advertisment
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மன்னார்வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன் காரணமாக,
இன்று (டிசம்பர் 5): கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (டிசம்பர் 6): ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக மழையும், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
கடல் அலை முன்னறிவிப்பு : வடதமிழக கடலோர பகுதிகளில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை இன்று (டிசம்பர் 5) இரவு 11:30 மணி வரை கடல் அலை 1.5 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று (டிசம்பர் 5) இரவு 11:30 மணி வரை கடல் அலை 1.2 முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்".
இவ்வாறு சென்னை வானிலை மையம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தது.