தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று (மே 19) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மே 19) அதி கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்று (மே 19) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
அதேபோல நாளை (மே 20) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
ஒரு தமிழ் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 2 நாட்களில் வட தமிழகத்துக்கு அருகே மேலடுக்கு சுழற்சியாக நிலவும். அங்கிருந்து இது நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் போது, இது புயல் சின்னமாக மாறி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இது மேற்கு திசை காற்றழுத்தத்தினால் அங்கிருந்து நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்கம் அருகே போகும் வாய்ப்புள்ளது.
புயல் காரணமாக நமக்கு மழை இல்லை என்றாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2,3 நாட்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் அனேக பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
கேரளா, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்னும் 3, நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும். 23, 24 ஆம் தேதிக்கு பிறகு, மற்ற உள்பகுதிகளில் மழையின் அளவு படிபடியாக குறைந்துவிடும், என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“