தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நேற்று சென்னையில் எழும்பூர், கோயம்பேடு, அண்ணாசாலை, கிண்டி,மந்தைவெளி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை விருகம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 17 விமானங்கள், புறப்பட வேண்டிய 18 விமானங்கள் தாமதமாகின. கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, மதுரை, திருச்சி, கோழிக்கோடு,கோவை, ஐதரபாத் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“