குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதம் முதலே பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனழை பெய்யக் கூடும். கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால், பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஏனைய உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தெற்கு உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதனைத் தொடர்ந்து வரும் 2 நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil