நேற்று, அதிகாலை வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவானது. இந்திய நேரப்படி நேற்று காலை 8.30 மணி அளவில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மீது அது மையம் கொண்டிருந்தது.
இந்நிலையில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
அக்டோபர் 11 அதிகாலை முதல் அக்டோபர் 12 மதியம் வரை ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், வானிலை மோசமாக இருக்கக்கூடும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பும் படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/weather-climate-.jpg)
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் வரும் 12ம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அப்பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக சென்னை வானொலி ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil