கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அமோகமாக பெய்திருக்கிறது. அதனால் தமிழகத்திலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழை முடிந்ததும், வடகிழக்கு பருவமழை சீஸன் தொடங்குகிறது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கான முகாமில் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: ‘வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே அனைத்து துறைகளிலும் மீட்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே வெள்ளம் வரும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் இன்றிரவு 10 மணி வரை கடல் சீற்றமாக காணப்படும். கடல் சீற்றமாக இருக்கும் நேரத்தில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும்.’ இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.