தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை கொட்டித் தீர்த்த கனமழையில் கூடலூரில் இரு வயல் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு மற்றும் முறிந்துள்ளதால் போக்குவரத்தும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாயாற்றில் தொடர்ந்து மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருவதால் அதிகாரிகள் கரையோரம் உள்ள மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 20.4 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது.
இதனிடையே, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரு மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர் , நாகை, புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதனிடையே மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் 12 முதல் 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“