தொடர் கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 30) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் மழை நீடித்தது. தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தந்நீரு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்காசியில் கனமழையால் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ’தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 31 முதல் ஆக.4-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்’, என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“