Chennai weather latest updates: தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்று இரவு 8.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதோடு வட தமிழகத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவிலிருந்து சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அண்ணாநகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, கிண்டி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், பூந்தமல்லி, வேளச்சேரி, மடிப்பாக்கம், மயிலாப்பூர், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது.
அதோடு, இன்று பிற்பகல் வரை விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு முதல் பெய்து வரும் மழையால், நகரம் குளிர்ந்திருக்கும் நிலையில் அடுத்து வரும் சில தினங்களிலும் இதே போன்று இரவு நேரங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சை, விழுப்புரம், சேலம், காஞ்சிபுரம், விருதுநகர், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு சென்னையில் மிதமான மழை தொடரும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ் நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், இன்றைய நாள் முழுக்க மழை பெய்யும் என்றும், இந்த மாதிரி நிகழ்வு மிக அறிதானதென்றும் குறிப்பிட்டுள்ளார்.