தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில தினங்களாக பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தற்போது, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் அதி கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
குறிப்பாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 20 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, நெல்லை மாவட்ட மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, இன்று முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று 40-45 கி.மீ முதல் அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும் மற்றும் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். எனவே மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“