Tamil Nadu Weather Forecast Updates: கடந்த மே மாதம் தமிழகத்தில் வெயில் கொளுத்திய நிலையில் தற்போது வெப்பம் தணிந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்நேரத்தில் இம்மழை சற்று ஆறுதலை அளிக்கிறது.
இதற்கிடையே சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ”தமிழகத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும், சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, ”கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின், அதிகப்படியான மழை இந்த பருவமழை காலத்தில் பெய்யக்கூடும். வால்பாறை மற்றும் சின்ன கல்லாறில் நடப்பு பருவ காலத்தின் முதல் 100 மி.மீ மழை பெய்துள்ளது.
வயநாடு பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை நிரம்பும். கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களின் மலைப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும்.
எனவே வீக் எண்டில் மலைப் பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்” என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.