தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது.
Advertisment
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணத்தால், சென்னையில் அங்கங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து சிக்கல் ஏற்படுகிறது.
மேலும், இந்த திடீர் கனமழையைக் குறித்து வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் டுவீட் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, "தமிழ்நாட்டிற்கு அருகே உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் 150 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
ஒரு மாதத்துக்கு சராசரி மழை 50 முதல் 60 மில்லி மீட்டர் வரை மட்டுமே பதிவாகும். ஆனால், தற்போது சில மணி நேரத்திலேயே 3 மடங்கு மழை பதிவாகியுள்ளது.
குஜராத்தில் புயல் கரையை கடந்ததால் அங்குள்ள ஈரப்பதம் நகரத்தொடங்கியது. இதனால் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் வரைக்கும் சென்னைக்கு மழை வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக 1996ஆம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக அடையாறு உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் 150 மி.மீ வரை மழை கொட்டித் தீர்த்தது.
1991, 1996 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 2023ல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது'' என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil