சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், 28 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் வெயில் அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. வெப்ப அலை காரணமாக அதிக வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
இந்த நிலையில் கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்தது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மே 21 ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் எனவும், அதன் பிறகு வெயில் அதிகரிக்கும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இதுதொடர்பான பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளப் பதிவில், "திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, தருமபுரி, வால்பாறை, சேலம், ராமநாதபுரம், ஈரோடு ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மே மாதத்தில் பல நூற்றாண்டுகளாக வெயில் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருவது வரவேற்கத்தக்கது. உட்புற மாவட்டங்களில் மழை இன்னும் முடியவில்லை.
கே.டி.சி.சி எனப்படும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் சென்னையில் வழக்கம் போல் கடலோரப் பகுதியில் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. இந்த போக்கு கடந்த 4-5 நாட்களாக நடந்து வருகிறது. இதே நிலை 23.05.2024 வரை மேலும் 2 நாட்களுக்கு தொடரும். அடுத்த 2 நாட்கள் சென்னை மக்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதற்கு பிறகு மே 28 ஆம் தேதிக்குள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெப்பம் திரும்பும். இந்த மே மாதம் சென்னை மாநகரில் ஒரு முறை கூட 40 டிகிரி பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே நடந்த மே 40 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலைமையுடன் இந்த மே மாதத்தில் இருந்து தப்பிக்க முடியுமா?" எனப் பதிவிட்டுள்ளார்.
Trichy, Namakkal, Thanjavur, Karur, Pudukottai, Dharmapuri, Valparai, Salem, Ramanathapuram, Erode all got heavy rains...
Posted by Tamil Nadu Weatherman on Monday, May 20, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“