மிக்ஜாம் புயல் எப்போது, எங்கு கரையை கடக்கும்? எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்தப் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் கரையை கடக்கும். தற்போது சென்னையில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மிக்ஜாம் புயல் வட தமிழகத்தை ஒட்டியே ஒரு நாளுக்கு மேலாக (டிசம்பர் -3, 4) பயணித்தப் பிறகே, தென் ஆந்திரா பகுதிக்குச் செல்லும். இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி காலை வரை புயல் சென்னை அருகே மையம் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 100 முதல் 150 மி.மீ.,க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 60 முதல் 70 கிமீ அளவிற்கு இருக்கலாம்.
இந்த ஆண்டு புயல்களில் தமிழகத்திற்கு பெரிய மழை இல்லை. இந்த மிக்ஜாம் புயல் தான் சென்னை அருகே மையம் கொண்டுள்ளது. இதனால், இந்த வடகிழக்கு பருவமழையில் அதிக மழையை எதிர்ப்பார்க்கலாம். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிபேட்டை மாவட்டங்களில் கனமழையை எதிர்ப்பார்க்கலாம். ஞாயிறு இரவு முதல் திங்கள் இரவு வரை அதிக மழையை எதிர்பார்க்கலாம்.
இதைத் தவிர கடலூர் மாவட்ட கடற்கரையோர பகுதிகளுக்கு மழையை எதிர்ப்பார்க்கலாம். உள் மாவட்டங்களில் மழைப் பெய்ய வாய்ப்பு குறைவு. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“