தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - முதல்வர் பழனிசாமி அதிரடி

மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை

வரும் 2019ம் ஆண்டு முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், தயாரித்து விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ (Beat Plastic Pollution) என்பதே இந்த ஆண்டுக்கான உலகச் சுற்றுச்சூழல் நாளின் கருப்பொருள். இதை ஐ.நா சபை முன் வைத்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க வேண்டாம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்கும் முயற்சியைத் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

இதுதொடர்பாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். பால், தயிர், மருத்துவ பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும், இதர பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை செய்வதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார். மேலும், துணிப்பைகளையும், பிளாஸ்டிக் அல்லாத பொருட்களையும் உபயோகிக்க பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இந்த உத்தரவு 2019, ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தில் தமிழக சட்டசபையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு சமூக ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close