தை 1 தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை: பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு… டாக்டர் ராமதாஸ் ஆதரவு

பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவும் தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும்” என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tamil New Year date controversy, dr ramadoss support to thai 1st, BJP Annamalai opposed to thai 1st tamil new year, தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை, தை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு, டாக்டர் ராமதாஸ் ஆதரவு, Chithirai 1st, Thai 1st, Tamil new Year date, tamil nadu politics

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் துணிப்பை என்று வெளியான புகைப்படத்தில், தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், தை 1ம் தேதியை தமிழக அரசு மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க உள்ளது என்று பேச்சு எழுந்ததால் தமிழக அரசியலில் சர்ச்சை ஆனது.

இதனைத் தொடர்ந்து, திமுகவினரும் திமுக கூட்டணி கட்சியினரும், திராவிட இயக்க ஆதரவாளர்களும் தை 1ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். இதற்கு மாறாக, அதிமுகவினரும் பாஜகவினரும் பாஜக ஆதரவாளர்களும் சித்திரை 1ம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு தமிழக அரசு தை 1ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் பதிவிட்டதால் சர்ச்சையானது.

தமிழ்நாட்டில், சித்திரை 1ம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்று ஒரு தரபினரும், தை 1ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என இன்னொரு தரப்பினரும் பல ஆண்டுகளாக கூறிவருகின்றனர்.

முந்தைய திமுக ஆட்சியில், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 2008ம் ஆண்டு தை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, தை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதை ரத்து செய்து, சித்திரை 1ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தது.

இந்த நிலையில், பத்தாண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தை 1ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவிக்குமா என்ற எதிர்ப்பார்ப்புகளும் கேள்விகளும் எழுந்தன. அதற்கு ஏற்றாற்போல, தமிழக முதலமைச்சரின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் கைப்பயில் இனித தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்ததால் தமிழ்ப் புத்தாண்டு தேதி பற்றிய சர்ச்சை மீண்டும் உயிர் பெற்று எழுந்தது.

இதனால், சித்திரை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றி, தை 1ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவிக்க திமுக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் திமுக அரசின் இந்த திட்டத்தை அதிமுகவினர், பாஜகவினர் கடுமையாக எதிர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித்திட்டத்தை கைவிட வேண்டும். தமிழ் புத்தாண்டு தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சித்திரை 1ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு” என்று தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தி கூறினார்.

பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவும் தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும்” என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தைப் பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்படுமா? என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இது தொடர்பான தமிழக அரசின் நிலை குறித்து முரண்பாடான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தைப் பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப் பை வழங்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. தமிழக அரசால் வழங்கப் படவுள்ள பரிசுப் பையின் மாதிரி சமூக ஊடகங்களில் வலம் வருவதும், அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயரில் இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிடப் பட்டிருப்பதும் தான் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பொங்கல் பரிசுப் பையில் குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போன்று தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்க தமிழக அரசு தீர்மானம் செய்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. அதனால் மகிழும் முதன் மனிதன் நானாகத் தான் இருப்பேன்.

ஆனால், கடந்த 3-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த 2022-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலில் ஏப்ரல் 14-ஆம் நாள் வியாழக்கிழமை தான் தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தமிழ்ப்புத்தாண்டு விஷயத்தில் தமிழ்நாடு அரசு இருவிதமான நிலைப்பாடுகளை இதுவரை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவற்றில் எதை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் ஏப்ரல் 14-ஆம் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியாகியுள்ள பொங்கல் பரிசுப் பை படத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதால் இந்தக் குழப்பம் அதிகரித்திருக்கிறது. இதை அரசு தான் தீர்க்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்கு ஆயிரமாயிரம் சான்றுகள் உள்ளன. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று நிறுவுவதற்கு சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலும், பிற சான்றுகளின் அடிப்படையிலும் தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று 1921-ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி விவாதித்த 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களும், சான்றோர்களும் அறிவித்தனர்.

அதன்பின்னர், 1939-ஆம் ஆண்டு திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார் உள்ளிட்டோர் பங்கேற்ற அனைத்திந்திய தமிழர்கள் மாநாட்டிலும் தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. “நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு, தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் பாடியிருக்கிறார். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று நம்புவதற்கும், அதை உலகுக்கு நிரூபிப்பதற்கும் இவற்றைக் கடந்து கூடுதல் சான்றுகள் எதுவும் தேவையில்லை.

தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக நான் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை ஏற்று கடந்த 2008-ஆம் ஆண்டில் தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், 2011-ஆம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் நாள் தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டத்தை நீக்குவதற்கான புதிய சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. அதை சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அகற்றப்பட்ட நிலையில், அதை மீண்டும் கொண்டு வர வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய அரசுக்கு உள்ளது. தைத் திங்கள் பிறக்க இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள்ளாக புதிய சட்டத்தை நிறைவேற்றி அதற்கு ஆளுனரின் ஒப்புதலையும் பெற வேண்டும். ஜனவரி மாதம் கூடும் கூட்டத் தொடரில் புதிய சட்டத்தை நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலைப் பெற அவகாசம் இருக்காது. அதைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து அவசர சட்டத்தைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil new year date controversy dr ramadoss support to thai 1st but annamalai opposed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com