சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டு அல்ல, தை 1-ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு என அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு, மீண்டும் சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டு என மாற்றி அறிவித்தார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் வழியில் தை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிப்பார் என்று தமிழ் ஆர்வலர்களால எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சித்திரை 1-ம் தேதியை அதாவது 14.04.24 ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு விடுமுறை என தமிழக அரசின் விடுமுறை பட்டியலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தி.மு.க அரசு ஏற்றுக்கொண்டதா என்ற விவாதம் எழுந்துள்ளது.
கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2008-ம் ஆண்டு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையில் தை 1-ம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கச் செய்தார். 'தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்ட முன் வடிவை'யும் சட்டசபையில் கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி. ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் சிவபுண்ணியமும், ம.தி.மு.க சார்பில் மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வப்பெருந்தகையும் மசோதாவை வரவேற்று ஆதரித்துப் பேசினார்கள். அதன் பிறகு, தை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.
2011-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல்வரான ஜெயலலிதா 23-8-2011 அன்று, “தமிழ்ப் புத்தாண்டு தை 1-ம் தேதி தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சித்திரையில் தொடங்குகிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட 'தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்ட முன் வடிவை' ரத்து செய்யப்பட்டு விட்டது” என்று அறிவித்தார். அதன் பிறகு, சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால், தி.மு.க-வினர், திராவிட இயக்கத்தினர், தமிழ் ஆர்வலர்கள் தை 1-ம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்படியே இருந்து வந்தது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. இதனிடையே, தமிழக அரசியலின் இரு பெரும் தலைவர்களாக இரு துருவங்களாக இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டிலும் கலைஞர் கருணாநிதி 2018-ம் ஆண்டிலும் மறைந்தனர்.
மு.க. ஸ்டாலின் தலமையிலான தி.மு.க அரசு, கலைஞர் கருணாநிதி வழியில், இந்த ஆண்டு தை 1-ம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த ஆண்டு சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டு என அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பெயரில் வெளியாகியுள்ள 2024ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை அறிவிப்பு ஆணையில், 14.04.24 ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்தநாள் விடுமுறை எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கலைஞர் கருணாநிதியின் வழியில் மு.க. ஸ்டாலின் தை 1-ம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்காதது ஏன் திராவிட இயக்கத்தை விமர்சிக்கும் தமித் தேசிய ஆர்வலர்கள் மத்தியில் ஒரு கேள்வியாக எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.