கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்

ஆளும் அதிமுக தனது கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதியை பயன்படுத்துவதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

By: January 23, 2021, 9:53:03 PM

தமிழக சட்டபேரவை தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் முதல்வர், திமுக சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக ஆளும் அதிமுக அரசு தங்களது ஆட்சியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து, வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், அதிமுக கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தங்கள் கட்சியை பலப்படுத்தும் நோக்கில், ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் விளம்பரத்திற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதாக திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹூ வை நேரில் சந்தித்த திமுக அமைப்பின் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதி  மற்றும் பி வில்சன் எம்.பி. ஆகியோர் நேரில் சந்தித்து, 2020 பிப்ரவரி முதல் அரசு கருவூல செலவில் ஆளும் அரசாங்கம் ரூ .1000 கோடியை செலவிட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  கூறுகையில், தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, ஒரு அரசு விளம்பரத்தில் எந்த அரசியல் கட்சியின் அடையாளங்களும், கட்சியை ஊக்குவிக்கும் வேறு எந்த கருத்துக்களும் இருக்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால்  தற்போது ஆளும் அதிமுக அரசு அரசியலமைப்பு ஆணைக்கு எதிரான இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 2016-ம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை மேற்கோள் காட்டி பேசிய அவர், எந்தவொரு அரசியல் கட்சியையும் ஊக்குவிப்பதற்காகவும், அல்லது அவர்களின் தேர்தல் சின்னத்தை பரப்புவதற்காகவும், பொது நிதியைப் பயன்படுத்துவது தவறான ஒன்று.

இந்த செயல் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்ற கருத்தாக்கத்திற்கு அப்பார்பட்டது. அரசியலமைப்பின்படி, பதிவுசெய்யப்பட்ட  எந்த அரசியல் கட்சியும் இந்த செயலை செய்யக்கூடாது. அவர்களின் விளம்பரங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களுடைய விளம்பரங்களுக்கும் பிரச்சாரத்திற்கு ஒருங்கிணைந்த அரசு நிதியைப் பயன்படுத்த கூடாது என்பதுதான் எங்களது கருத்து. இது பொதுமக்களின் நலனுக்காக வைக்கப்பட்டுள்ள நிதி. இந்த நிதியை மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் கட்சி விளம்பரத்திற்கு, உங்கள் கட்சி நிதியில் இருந்து செலவு செய்யலாம் ”என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஏற்கனவே ரூ. ஆறு லட்சம் கோடி மதிப்புள்ள கடனைக் கொண்டுள்ளது என்றும், இந்த சூழ்நிலையில், அதிமுக அரசு இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி, பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சாரத்தை பற்றிய பிளக்ஸ் மற்றும் பேனர்களை காண முடிகிறது. இந்த பிளக்ஸ் மற்றும் பேனர்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால் தமிழகம் முழுவதும பிளக்ஸ் வைப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது, ஆனால் இந்த உத்தரவுகளை மதிக்காத அதிமுக அரசு, தொடர்ந்து சர்வாதிகார முறையில் செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil news dmk complaint to election commission against aiadmk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X