Sivakasi FireWorks Factory Fire Accident : இந்தியாவின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு உற்பத்திக்கு பெயர்பெற்ற இடமாக உள்ளது. இங்கு தயாரிக்கும் பட்டாசுகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகாசி உலகளவில் பிரபலமாக விளங்குகிறது. ஆனால் இங்கு இருக்கும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், சிவகாசி அருகே காளையர்குறிச்சி பகுதியில் இன்று ஏற்பட்ட பட்டாசு அலை வெடிவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அடுத்த காளையர்குறிச்சி பகுதியில், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிலையில், இன்று மாலை பட்டாசு உற்பத்தியின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான நிலையில், 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த புதுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில், பலர் படுகாயமடைந்துள்ளதால், பலிஎண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விருநகர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டு 10 க்கு மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"