/tamil-ie/media/media_files/uploads/2022/05/cylinder-1.jpg)
Tamil News Headlines LIVE
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயர்ந்து ரூ. 1,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 50 அதிகரித்த நிலையில் மீண்டும் விலை உயர்வு சாமானிய மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுதேர்வு இன்று தொடக்கம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 3,936 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. முறைகேடுகளை தடுக்க 3,050 பறக்கும் படைகளும், 1,241 ஸ்டாண்டிங் ஸ்குவார்டு படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு மையத்துக்கு ஆசிரியர்கள் மற்றும் தேர்வர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
IPL 2022: டெல்லி அணி அபார வெற்றி!
ஐபிஎல் போட்டியின் நேற்று, ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் - 92, ரோவ்மேன் பவல் - 67 ரன்கள் எடுத்தனர். 208 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Tamil Nadu news live update
என்.எல்.சி ஆட்சேர்ப்பு.. முதல்வர் மோடிக்கு கடிதம்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டும். எதிர்காலத்தில் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் போது என்.எல்.சி நிறுவனம் தகுதித் தேர்வை நடத்த வேண்டும். என்.எல்.சி நிறுவனத்திற்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை மக்களுக்கு உதவ மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி!
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு, உதவிட முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, மதிமுக சார்பில், ரூ.13.15 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை, அக்கட்சியின் தலைவர் வைகோ, நேற்று தலைமை செயலத்தில் வைத்து ஸ்டாலினிடம் வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 05:20 (IST) 07 May 2022சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேர் கைது
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில், தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகிய 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 21:23 (IST) 06 May 2022ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். மனநிலையில் இயங்குகிறார் - திருமாவளவன்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மிக ஆபத்தானது என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ். வளர்ப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இன்று ஆளுநர் பொறுப்பில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். மனநிலையிலேயே இயங்குகிறார் என்று விமர்சித்துள்ளார்.
- 20:04 (IST) 06 May 2022பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 மாணவர்கள் ஆப்செண்ட் - பள்ளிக் கல்வித்துறை தகவல்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது. 3,936 தேர்வு மையங்களில் 9.55 லட்சம் பேர் தேர்வு எழுதவிருந்த நிலையில், 42,024 மாணவர்கள் ஆப்செண்ட் என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- 18:58 (IST) 06 May 2022விக்னேஷ் மரண வழக்கு: 5 காவலர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் -எஸ்.சி ஆணையம் பரிந்துரை
விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- 18:56 (IST) 06 May 2022சென்னை ஐஐடி பாலியல் வழக்கில் அனைவரையும் கைது செய்ய வேண்டும் - டிஜிபி-க்கு எஸ்.சி ஆணையம் பரிந்துரை
சென்னை ஐஐடி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் தேசிய எஸ்.சி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களை சென்னை ஐஐடியில் ஆய்வு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க வேண்டும். விசாரணையை விரைவுபடுத்தி அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 18:46 (IST) 06 May 2022தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் - அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நகேந்திரன் நீடிப்பார். வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
- 18:06 (IST) 06 May 2022மன்னார்குடி ஜீயரின் பேச்சைக் கண்டித்து மே 8-ல் கண்டன ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மன்னார்குடி ஜீயரின் பேச்சைக் கண்டித்து மே 8-ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மே 9-ல் நெய்வேலியில் வஞ்சிக்கப்படும் தமிழ் இளைஞர்களுக்கான உரிமைப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
- 17:21 (IST) 06 May 202213ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம்!
கரூரில் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வரும் 13ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தியை மீண்டும் அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து போராட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17:20 (IST) 06 May 2022வைகை ஆற்றை மாசுபடுவதில் இருந்து பாதுகாக்க கோரி வழக்கு!
மதுரையில் உள்ள வைகை ஆற்றை மாசுபடுவதில் இருந்து பாதுகாக்க கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 17:12 (IST) 06 May 2022மே 14 முதல் கோடை விடுமுறை - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 17:08 (IST) 06 May 2022சரிவுடன் முடிவடைந்த வர்த்தகம்!
இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 866.65 புள்ளிகள் சரிந்து 54,835.58 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மற்றும் நிஃப்டி 271.40 புள்ளிகள் சரிந்து 16,411.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து.
- 17:07 (IST) 06 May 2022சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு!
புதுக்கோட்டையில் கடந்த 2017ல் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சரண்(22) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 16:16 (IST) 06 May 2022சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு; அமைச்சருக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை!
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூவருக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 16:15 (IST) 06 May 2022போதைப் பொருட்கள் விற்பனை; 20 பேர் கைது!
சென்னையில் கடந்த 7 நாட்களில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டு 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 74.45 கிலோ கஞ்சா, 16,850 போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15:50 (IST) 06 May 2022அமைச்சர் எ.வ வேலு மத்திய அரசிற்கு வலியுறுத்தல்!
ராமேஸ்வரத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக சுற்றுலா படகுகளை இயக்குதல், அதற்கான படகு குழாம் அமைத்தல், தூர்வாருதல் ஆகிய பணிகளை சாகர்மாலா திட்டத்தின் கீழ் நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு தெரிவித்துள்ளார்.
- 15:29 (IST) 06 May 2022தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளது!
தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னை, புரசைவாக்கத்தில் திருடுபோன பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் காவல் உதவி செயலியை பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும் காவலர்களுக்கு அறிவுறுத்தின்னார். மேலும் அவர்கள் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- 15:03 (IST) 06 May 2022விடுதிகளில் ஆண்டுக்கு 3 முறை மருத்துவ பரிசோதனை!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆண்டுக்கு 3 முறை மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூ 10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14:37 (IST) 06 May 2022விசாரணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
விசாரணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் ஆலோசனை நடத்தி வருகினறனர். சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவும் பங்கேற்றுள்ளார்.
- 14:08 (IST) 06 May 2022காவல்துறை வழங்கிய ₨1 லட்சத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் - நீதிபதி அறிவுறுத்தல்
சென்னை, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் வினோத் காவல்துறை வழங்கிய நிவாரணத்தை திரும்ப வழங்க முயன்றதாக வாக்குமூலம் அளித்த நிலையில், காவல்துறை வழங்கிய ₨1 லட்சத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என வினோத்துக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
- 14:05 (IST) 06 May 20222 பழங்குடியின கிராமங்களில் உடனடியாக சாலை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தின் 2 பழங்குடியின கிராமங்களில் உடனடியாக சாலை அமைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழூர் வடுகமேலூர், புதுப்பட்டி - கெடமலை இடையே சாலைகள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 14:04 (IST) 06 May 2022தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 12:49 (IST) 06 May 2022கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை கோரிய மனு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 12:47 (IST) 06 May 2022கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
ஷவர்மா சாப்பிட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நாகையில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டதில், கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்துள்ளனர்.
- 11:36 (IST) 06 May 2022சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
- 11:35 (IST) 06 May 2022தனியார் ஹோட்டலை தற்காலிகமாக மூட உத்தரவு
தஞ்சாவூர் :ஒரத்தநாடு அருகே ஒ.மேட்டுப்பட்டியில் மாணவர்கள் ஷவர்மா சாப்பிட்ட தனியார் ஹோட்டலை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 11:34 (IST) 06 May 2022சுப்ரமணியன் சுவாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி, யமுனை நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரும் விவகாரம் தொடர்பான இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய சுப்ரமணியன் சுவாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- 11:02 (IST) 06 May 2022தயக்கம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும்.. அன்பில் மகேஷ்!
மாணவர்கள் தயக்கம் இல்லாமல் வருகை தந்து தேர்வு எழுத வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மை பள்ளிக்கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து தேர்வெழுதாத மாணவர்களை இனி வரும் நாட்களில் தேர்வு எழுத வைக்க வேண்டும். தென்மாவட்டங்களில் சாதிய குறியீடுகளுடன் மாணவர்கள் கைகளில் கயிறுகள் கட்டிவருவது கண்டிக்கத்தக்கது - அமைச்சர் அன்பில் மகேஷ்.
- 10:43 (IST) 06 May 20228 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன்!
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில், விக்னேஷை கைது செய்த காவல் உதவி ஆய்வாளர் உட்பட 8 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
- 10:27 (IST) 06 May 2022அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
வங்க கடலில் அந்தமான் அருகே உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 10:23 (IST) 06 May 2022பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 10:23 (IST) 06 May 2022தங்கம் விலை குறைவு!
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 38,728க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,841க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 10:23 (IST) 06 May 2022ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!
தஞ்சாவூரில் உணவகத்தில் நேற்று ஷவர்மா சாப்பிட்ட, ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 3 பேர், உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 10:22 (IST) 06 May 2022மாணவி சிந்து மருத்துவச் செலவை அரசே ஏற்கும்!
சென்னையில் படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்ற அரசு உதவும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- 09:30 (IST) 06 May 2022தருமபுரம் ஆதீனம் பட்டணபிரவேசம்.. சேகர்பாபு தகவல்!
வரும் 22ஆம் தேதி நடைபெறும் தருமபுரம் ஆதீனம் பட்டணபிரவேசம் நிகழ்வு குறித்து நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் ஆன்மிகம், இறை வழிபாட்டிற்கு எதிராக கருத்து கூறவில்லை- அமைச்சர் சேகர்பாபு.
- 09:06 (IST) 06 May 2022ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு!
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், ஒரே நேரத்தில் மாணவர்கள் 2 பட்டப்படிப்புகளை படிக்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை படிக்கலாம் - யுஜிசி
- 09:06 (IST) 06 May 2022ஓபிஎஸ் வலியுறுத்தல்!
பொதுத் தேர்வுகள் நடைபெறும்போது மின் வெட்டு ஏற்பட்டால் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு அதிகம். எனவே தேர்வின்போது தமிழ்நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
- 09:06 (IST) 06 May 2022இந்தியாவில் 47 லட்சம் கொரோனா உயிரிழப்புகள்?
கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் 47 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், இது தவறான தகவல் என்றும், இந்தியாவில் 4.81 லட்சம் கொரோனா இறப்புகள் மட்டுமே பதிவானதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 08:29 (IST) 06 May 2022வழக்கறிஞர்களுக்கு கவுன் அணிவதிலிருந்து விலக்கு!
சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில், கருப்பு கோட் மற்றும் கழுத்துப் பட்டையை கட்டாயம் அணிவதிலிருந்து’ வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 08:29 (IST) 06 May 2022இலங்கையில் கடையடைப்பு போராட்டம்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் சூழலில், இலங்கை அரசு பதவி விலக கோரி, நாடு முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
- 08:25 (IST) 06 May 2022உக்ரைன் ராணுவத்துக்கு உளவு தகவல்களை பகிர்ந்த அமெரிக்கா!
ரஷ்ய தளபதிகளை கொலை செய்ய, ரஷ்யாவின் மதிப்பு வாய்ந்த இலக்குகள் குறித்து உளவு தகவல்களை, உக்ரைன் ராணுவத்துக்கு பகிர்ந்ததாக அமெரிக்க பென்டகன் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
- 08:25 (IST) 06 May 2022சட்டப்பேரவையில் இன்று!
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது.
- 08:25 (IST) 06 May 2022CUET நுழைவுத்தேர்வு.. தேதி நீட்டிப்பு!
மத்திய பல்கலைக்கழக CUET நுழைவுத்தேர்வு விண்ணப்பத்திற்கான காலக்கெடு, வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து யுஜிசி அறிவித்துள்ளது.
- 08:24 (IST) 06 May 2022மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி!
இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் உதவியதற்கு, தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றி என மு.க.ஸ்டாலினுக்கு’ இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கடிதம் எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.