scorecardresearch
Live

Tamil News : நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி

Tamil Nadu News, Tamil News LIVE Updates,Latest News June 6 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Updates: கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் 2 சிறுவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, விழிஞ்சம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும் – இலங்கை பிரதமர்

இலங்கையில் பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படலாம். போதிய உரங்கள் இல்லாத நிலையில், விவசாய பணிகளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சென்னையில் 15வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனையாகிறது

உத்தரகாண்ட் விபத்து – 22 பேர் பலி

உத்தரகண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி அறிவித்தார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்- ரஃபேல் நடால் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார் ரஃபேல் நடால். இறுதிப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை 6-3, 6-3,6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
22:50 (IST) 6 Jun 2022
அப்துல் கலாம் தீவில் நடைபெற்ற அக்னி-4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி – பாதுகாப்பு அமைச்சகம்

ஒடிசா, அப்துல் கலாம் தீவில் நடைபெற்ற அக்னி-4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

22:15 (IST) 6 Jun 2022
இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் கடிதம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். லோகேஷ் கனகராஜூக்கான பாராட்டுகள் தொடர வாழ்த்துகள்; அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள், லோகேஷின் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

21:38 (IST) 6 Jun 2022
முகவரி அற்ற மக்களுக்கு முகவரி கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் – இயக்குநர் ஞானவேல்

இயக்குநர் த.செ. ஞானவேல்: “ஜெய்பீம் படத்தில் நாங்கள் நாதியற்றவர்கள் என்று ஒரு வசனம் வரும்… நாதியற்றவர்கள் என்றால் முகவரி அற்றவர்கள் என்று பொருள்; அந்த முகவரி அற்ற மக்களுக்கு முகவரி கொடுத்திருக்கிறார் முதலமைச்சர். இதை நான் படத்தின் நோக்கம் வெற்றி பெற்றதாகக் கருதுகிறேன்.” என்று கூறினார்.

20:43 (IST) 6 Jun 2022
“ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை” – ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை. என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் ஜெய்பீம்; அந்த படம் பலரது மனசாட்சியை உலுக்கியது.’ என்று தெரிவித்துள்ளார்.

19:46 (IST) 6 Jun 2022
தமிழ்நாட்டில் இன்று 90 பேருக்கு கொரோனா; 64 பேர் டிஸ்சார்ஜ்; உயிரிழப்பு இல்லை

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 64 பேர் டிஸ்சார்ஜ்; உயிரிழப்பு இல்லை! 862 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

19:24 (IST) 6 Jun 2022
அதிமுக – பாஜக உறவில் விரிசல் இல்லை; நல்ல முறையில் உள்ளது – இ.பி.எஸ் பேட்டி

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: “பிரதமர் சென்னை வந்த போது நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் நூல் விலையை குறைக்கக்கோரி கோரிக்கை வைக்கவில்லை. வருமானம் வரக்கூடியவைகளுக்கு மட்டுமே அவர் கோரிக்கை வைப்பார்.

பொன்னையன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதிமுக-பாஜக உறவு நல்ல முறையில் உள்ளது. அதிமுக – பாஜக இடையே எந்த உறுத்தலும் இல்ல.

திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களை மறைக்கவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் போடுகிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. சேலம், ஓமலூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடு சேர்ந்து வருவது 'நில அபகரிப்பு. எங்கையாவது ஏமாந்தவர்கள் இருந்தால், அந்த நிலத்தை அபகரித்துவிடுவார்கள். எல்லா துறைகளிலும் ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு உள்ளது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து கொள்ளை புறம் வழியாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாலும் 'செவிடன் காதில் ஊதிய சங்கு' போலதான் இந்த அரசு செயல்படுகிறது. நூல் விலை உயர்வால் 30 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.” என்று கூறினார்.

18:37 (IST) 6 Jun 2022
சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்ததால் செய்தித் தொடர்பாளர்கள் மீது பாஜக நவடிக்கை எடுத்தது – ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், “சர்வதேச அரங்கில் எதிர்ப்பு எழுந்ததாலேயே, பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவர் மீதும் பாஜக நவடிக்கை எடுத்துள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

17:33 (IST) 6 Jun 2022
ரிசார்ட் தீம் பார்க் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி; போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

திருப்பூரில் உள்ள தனியார் ரிசார்ட் தீம் பார்க்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீரில் விளையாடிக்கொண்டிருந்த 15 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

16:44 (IST) 6 Jun 2022
ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? – இபிஎஸ் கேள்வி

உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப் போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

16:17 (IST) 6 Jun 2022
நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து

16:16 (IST) 6 Jun 2022
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமின் வழங்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

15:56 (IST) 6 Jun 2022
ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பை அதிகரிக்க முடிவு

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பை அதிகரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ஆதார் உடன் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் வரம்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15:54 (IST) 6 Jun 2022
சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் அதிர்ச்சி தகவல்

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்ததது தொடர்பான விசாரணையில் ஆந்திரா, கேரளாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறுமியை அழைத்து சென்றது அம்பலமாகியுள்ளது

15:26 (IST) 6 Jun 2022
ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தி படம் குறித்து வதந்திக்கு ரிசர்வ் வங்கி விளக்கம்

ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தி படத்தை மாற்ற பரிசீலித்து வருவதாக வெளியான விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் நோட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது” ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் படம் மாற்றப்படும் என்ற செய்தியில் உண்மை இல்லை என கூறியுள்ளது.

15:24 (IST) 6 Jun 2022
தீ விபத்துக்களுக்கான இழப்பீட்டுத் தொகை 20 ஆயிரமாக உயர்வு

தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீ விபத்துக்களுக்கான இழப்பீட்டுத் தொகை ₨5,000-ல் இருந்து ₨20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிலிருந்து உரிய சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அரசாணை உறுப்பினர்கள் வேறு எந்த நல வாரியத்திலும் பதிவு செய்து இழப்பீடுத் தொகை, நல உதவித் திட்டம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

15:00 (IST) 6 Jun 2022
பேருந்தில் இ-டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ-டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும். Gpay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி இ-டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்

14:31 (IST) 6 Jun 2022
பப்ஜி மதன் ஜாமீன் கோரிய மனு வாபஸ் வாபஸ்

பப்ஜி மதன் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்யப் போவதாக நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, ஜாமின் மனு வாபஸ் பெறப்பட்டது. தன்னுடன் விளையாடியவர்களிடம் மட்டுமே உரையாடியதாகவும், 316 நாட்களாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என பப்ஜி மதன் கோரிக்கை விடுத்திருந்தார்

14:11 (IST) 6 Jun 2022
சென்னை, ரஷ்ய நாட்டு கலாச்சார சென்டரில் தீ விபத்து

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள ரஷ்ய நாட்டு கலாச்சார சென்டரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

13:58 (IST) 6 Jun 2022
கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது

13:30 (IST) 6 Jun 2022
முருகனுக்கு பரோல் கோரி மனைவி நளினி தாக்கல் செய்த மனு வாபஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகனுக்கு பரோல் கோரி மனைவி நளினி தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதால் முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பத்தை சிறை நிர்வாகம் நிராகரித்துவிட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பரோல் விண்ணப்பம் நிராகரிப்பை எதிர்த்து சிறைத்துறை டி.ஐ.ஜி. முன் மேல்முறையீடு செய்யலாம் என சிறைத்துறை தரப்பு கூறியதை அடுத்து டிஐஜியிடம் மேல்முறையீடு செய்ய நளினி தரப்புக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

13:18 (IST) 6 Jun 2022
தமிழகத்தின் சொகுசு கப்பலுக்கு புதுச்சேரியில் அனுமதி தரவில்லை – தமிழிசை

சென்னையில் இருந்து புறப்படும் சொகுசு கப்பலுக்கு புதுச்சேரி வருவதற்கு அனுமதி தரவில்லை. புதுச்சேரியில் சொகுசு கப்பலை அனுமதித்தால், கலாச்சார சீர்கேடு இல்லாமல், பாதிக்காத வகையில் அனுமதி தரப்படும் என துணைநிலை ஆளுனர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்

12:37 (IST) 6 Jun 2022
ஸ்மார்ட் பயண அட்டை!

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

12:37 (IST) 6 Jun 2022
அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12:07 (IST) 6 Jun 2022
தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை!

தமிழகத்தில் 9ஆம் வகுப்பு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

12:06 (IST) 6 Jun 2022
அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை!

இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கிறது. தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது. ஒரு மத ஆளுமையை இழிவுபடுத்தும், புண்படுத்தும் ட்வீட்கள் மற்றும் கருத்துக்கள் சில நபர்களால் செய்யப்பட்டன. அவை எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. சம்பந்தப்பட்ட கட்சிகளால் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்திய வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.

11:34 (IST) 6 Jun 2022
குடியரசுத் தலைவர் இரங்கல்!

கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணை நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

11:09 (IST) 6 Jun 2022
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பதவியேற்பு!

தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் பதவியேற்றுக் கொண்டார்.

10:44 (IST) 6 Jun 2022
மாற்றுத்திறனாளிகளுக்காக அருங்காட்சியகம் திறப்பு

சென்னையில் ரூ1 கோடி செலவில் ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட அனைத்தும் சாத்தியம் என்ற அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

10:07 (IST) 6 Jun 2022
கடலூரில் 7 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. நீரில் மூழ்கி இறந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

10:05 (IST) 6 Jun 2022
இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ80 உயர்ந்து, சவரன் ரூ38,280க்கும், கிராம் ரூ4,785க்கும் விற்பனையாகிறது.

09:53 (IST) 6 Jun 2022
இந்தியாவில் மேலும் 4,518 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,518 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2,779 பேர் குணமடைந்துள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 782 ஆக உள்ளது.

09:50 (IST) 6 Jun 2022
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை

உப்பு காற்றினால் திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தவிர்க்க, ரசாயன கலவை பூச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்படுகிறது

09:02 (IST) 6 Jun 2022
நைஜீரியா தேவாலயத்தில் தாக்குதல் – 50க்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் ஒண்டோ மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்தி துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்தததாக தகவல்

08:48 (IST) 6 Jun 2022
பார்வை சவால் உடையவர்களுக்கு சிறப்பு நாணயங்கள்

பார்வை சவால் உடையவர்கள் எளிதில் கண்டறியும் வகையில் ரூ1,ரூ2,ரூ5,ரூ 10 , ரூ20 என சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படவுள்ளது. இன்று நடைபெறும் நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் ஐகானிக் வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிடவுள்ளார்,

08:31 (IST) 6 Jun 2022
பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் – உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் 27 நாடுகளில் 780 பேருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல். பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை

08:17 (IST) 6 Jun 2022
டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் சோதனை

டெல்லியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Web Title: Tamil news kerala norovirus live updates