Live

News Highlights: கோயில்கள் திறப்பு எந்த கட்சிக்கும் வெற்றி அல்ல- அமைச்சர் சேகர் பாபு

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 102.10 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 97.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடலூர் மாவட்டம் குமராட்சி, காட்டுமன்னார் கோயிலில் ரூ.100.29க்கு டீசல் விற்பனை செய்யப்படுவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழையும், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உலகளவில் 24 கோடியை நெருங்கும் கொரோனா

உலகளவில் தற்போது 23.99 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.72 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48 லட்சத்து 88 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
5:11 (IST) 14 Oct 2021
கோயில்கள் திறப்பு எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல – அமைச்சர் சேகர் பாபு

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “முதலமைச்சர் வழிகாட்டுதல்படி இன்று முதல் அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். அதே வேளையில், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு தரப்பில் கோரிக்கைகளை பெற்றதையொட்டியே எல்லா நாட்களிலும் கோயில்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி தேவையான முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும். அதே நேரம், அர்ச்சனை, பூ, மாலை பழம் வைத்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதி கிடையாது.

அத்துடன் பணியாற்றும் அர்ச்சகர்கள், மற்றும் பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். விசேஷ நாட்களில் கொரோனா பரவாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க அனைத்து திருக்கோவிலுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

3:31 (IST) 14 Oct 2021
லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவை சம்பவத்தை நடித்துக் காட்டச் சொன்ன விசாரணைக்குழு

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை லக்கிம்பூர் வன்முறையின் பின்னணியில் இருப்பதாகக் குற்றம் சாட்டிய பாஜக தலைவர் ராம் இக்பால் சிங் அவரை பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில்இருந்து நீக்க வேண்டும் என்று வியாழக்கிழமை வலியுறுத்தினார்.

லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, எட்டு பேரைக் கொன்ற வழக்கில் வியாழக்கிழமை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் 3 பேரை அக்டோபர் 3ம் தேதி சம்பவத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளை மீண்டும் நடித்துக் காட்டுமாறு அழைத்துச் சென்றனர்.

3:22 (IST) 14 Oct 2021
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்

அக்டோபர் 3ம் தேதி கோவா செல்லும் கப்பலில் நடந்த சோதனையைத் தொடர்ந்து ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். கப்பல் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக ஆர்யன் கான் மற்றும் இரண்டு பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

வியாழக்கிழமை விசாரணை நிறுவனம் என்சிபி மற்றும் பாதுகாப்பு வழக்கறிஞர்களின் விரிவான வாதங்களைக் கேட்ட பிறகு, சிறப்பு நீதிபதி வி.வி பாட்டீல் அக்டோபர் 20 ஆம் தேதி உத்தரவுக்காக வழக்கை ஒத்திவைத்தார்.

அக்டோபர் 3 ஆம் தேதி கோவா செல்லும் கப்பலில் நடந்த சோதனையைத் தொடர்ந்து ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

1:55 (IST) 14 Oct 2021
அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1:14 (IST) 14 Oct 2021
கொள்ளையரால் சுடப்பட்டு உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

காஞ்சிபுரத்தில் கொள்ளையரால் சுடப்பட்டு உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் துளசிதாஸ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

1:07 (IST) 14 Oct 2021
ஷாருக்கான் மகனுனுக்கு ஜாமீன் வழக்க அரசு தரப்பு கடும் எதிர்ப்பு

போதைப்பொருள் பயன்பாடு வழக்கில் கைது – நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க அரசுத்தரப்பு நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

1:00 (IST) 14 Oct 2021
ரஜினி நடித்த அண்ணாத்த படத்தின் டீசர் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் டீசர் வெளியீடு – படத்தயாரிப்பு நிறுவனம்.

11:20 (IST) 14 Oct 2021
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மருத்துவமனையில் அனுமதி

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வேப்பேரியில் உள்ள அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

10:55 (IST) 14 Oct 2021
அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகளுககு தடை தொடரும்

பண்டியை காலத்தை முன்னிட்டு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும் என கூறியுள்ளது.

10:17 (IST) 14 Oct 2021
டிசம்பரில் வெளியாகும் ஆண்டி இண்டியன்

யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளூ சட்டை மாறன், தற்போது இயக்கியுள்ள ஆண்டி இண்டியன் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10:12 (IST) 14 Oct 2021
வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கடற்கரைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் செல்ல அனுமதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

9:22 (IST) 14 Oct 2021
அண்ணாமலை பல்கலை. ஊதிய விவகாரம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஊதிய குறைப்பு தொடர்பாக 2018ல் பல்கலைகழகம் பிறப்பித்த நோட்டீசுக்கு 2 வாரங்களில் விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

9:13 (IST) 14 Oct 2021
எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்ற இறுமாப்பு கிடையாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை எனக்கு கிடையாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

9:09 (IST) 14 Oct 2021
சிக்கன் சாப்பிட்ட தாய் – மகள் மரணம்

தூத்துக்குடி கோவில்பட்டியில் சிக்கன் சாப்பிட்ட தாய் மற்றும் மகள் இறந்துள்ளனர். தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

8:29 (IST) 14 Oct 2021
நீட் தேர்வு எதிர்ப்பு; ஒடிசா முதல்வரிடம் ஆதரவு கேட்ட கனிமொழி

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் கனிமொழி எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்

8:20 (IST) 14 Oct 2021
கோரிக்கையை நிறைவேற்றிய விஜய் மக்கள் இயக்கம்

வேலூர், தாட்டிமானப்பல்லி ஊராட்சி 6வது வார்டில், வெற்றி பெற்ற மறுநாளே மக்களின் கோரிக்கையை விஜய் மக்கள் இயக்கம் நிறைவேற்றியுள்ளது. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

8:12 (IST) 14 Oct 2021
புளியந்தோப்பு குடியிருப்பு – அரசு நடவடிக்கை

சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பில் 45 நாட்களுக்குள் மீண்டும் பூச்சு வேலைகளை செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

7:32 (IST) 14 Oct 2021
அதிமுக வேட்பாளர்கள் மனுவை நிராகரிக்க செய்தது

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மனுவை நிராகரிக்க செய்தது திமுக என்றும் மாநில தேர்தல் ஆணையத்தை முதலமைச்சர் கையில் எடுத்துக்கொண்டார் என்றும் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

6:50 (IST) 14 Oct 2021
கோவையில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

கோவை கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து உதவி இயக்குனர் சூர்யாவிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5:17 (IST) 14 Oct 2021
‘மன்மோகன் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ – மோடி ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

4:36 (IST) 14 Oct 2021
கடந்த 24 மணி நேரத்தில் 18,987 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,987 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 246 பேர் உயிரிழந்துள்ளனர். ஓரே நாளில், கொரோனா தொற்றிலிருந்து 19,808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

4:22 (IST) 14 Oct 2021
தீபாவளிக்காக ரேஷன் திறப்பு நேரம் அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

3:39 (IST) 14 Oct 2021
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் ஏற்கனவே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், தற்போது அரபிக்கடலிலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புதிதாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா-ஒடிஷா நோக்கி செல்ல வாய்ப்புள்ளது.

3:00 (IST) 14 Oct 2021
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா?

போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மும்பை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை வருகிறது.

Web Title: Tamil news live today diesel price corona count live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com