Advertisment

News Highlights: லக்கிம்பூர் வன்முறை; மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன் மறுப்பு

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
News Highlights: லக்கிம்பூர் வன்முறை; மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன் மறுப்பு

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே முன்னிலையில் உள்ளன. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

Advertisment

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.79 ரூபாய், டீசல் லிட்டர் 97.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகளவில் கொரோனா பாதிப்பு 23.94 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.94 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.67 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:30 (IST) 13 Oct 2021
    லக்கிம்பூர் கேர் வன்முறை வழக்கு: ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் மறுப்பு; மேலும் 2 பேர் கைது

    லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக மேலும் 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் முக்கிய குற்றவாளியான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துள்ளது.

    சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் ஆஜரான அங்கித் தாஸ் மற்றும் லத்தீஃப் காலே ஆகியோர் விசாரணைக்குப் பிறகு காவலில் எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.



  • 20:25 (IST) 13 Oct 2021
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.



  • 19:45 (IST) 13 Oct 2021
    தமிழகத்தில் 1,300க்கு கீழே குறைந்தது கொரோனா பாதிப்பு; 19 பேர் பலி

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,300க்கு மேல் பதிவாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 1280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்தனர்.



  • 19:03 (IST) 13 Oct 2021
    ஊரக உள்ளாட்சி தேர்தலில் மநீம-க்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி; கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:25 (IST) 13 Oct 2021
    சிபிசிஐடி விசாரணை நிறைவு; திமுக எம்.பி ரமேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

    முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கில் ஒரு நாள் சிபிசிஐடி காவல் விசாரணை நிறைவடைந்ததையடுத்து திமுக கடலூர் எம்.பி ரமேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



  • 17:40 (IST) 13 Oct 2021
    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு

    முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. நீட் விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து

    குறித்து பேசப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 17:17 (IST) 13 Oct 2021
    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் நீட் விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதா குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 16:56 (IST) 13 Oct 2021
    உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.கவின் வெற்றி கவுரவமானது - ராமதாஸ்

    உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.கவின் வெற்றி கவுரவமானது; மரியாதைக்குரியது என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளாட்சி தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் மூன்றாவது அரசியல் சக்தியாக பாமக உருவெடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.



  • 16:27 (IST) 13 Oct 2021
    அக்.16ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகத்தில் அக்.14,15ஆம் தேதிகளில் அரசு விடுமுறை வரும் நிலையில், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி அக்.16ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



  • 16:24 (IST) 13 Oct 2021
    இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம்

    ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ள 7-வது டி20 உலககோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணிக்காக புதிய சீருடையை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்துள்ளது.



  • 16:18 (IST) 13 Oct 2021
    இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை - நிர்மலா சீதாராமன்

    நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் பரவிவரும் நிலையில்,, இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை, இதுபற்றிய அறிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்றவை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.



  • 15:48 (IST) 13 Oct 2021
    சென்னையில் மழை எச்சரிக்கை

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்; அக்டோபர் 17ல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கனமழை பெய்யும்!" என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 15:14 (IST) 13 Oct 2021
    டெண்டர் முறைகேடு - பதில்மனு தாக்கல்

    மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்துபோன விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது என்றுகூறி டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • 15:03 (IST) 13 Oct 2021
    வரலாறு காணாத வன்முறை

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நடைபெற்றிருக்கிறது. மாநில தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றி விட்டது திமுக அரசு. திமுக அரசும், தேர்தல் ஆணையமும் நடத்தி உள்ள விதிமீறல்களை பட்டியலிட்டால் நாடு தாங்காது. முறைகேடுகள் தொடர்பான புகார் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பழுதடைந்து இருப்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது. திமுகவிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் தாமதமாக தொடங்கி உள்ளது. அதிமுக முகவர்கள் பல இடங்களில் மையங்களில் அனுமதிக்கப்படவில்லை என்று திமுக அரசு மீது புகார்களை அடுக்கியுள்ளது அதிமுக.



  • 14:58 (IST) 13 Oct 2021
    முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம்

    அக்டோபர் 30, முத்துராமலிங்க தேவரின் 114 -வது ஜெயந்தி விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படவுள்ளது. கமுதி, பசும்பொன் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு ஏற்க காமாட்சி கணேசன் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.



  • 14:20 (IST) 13 Oct 2021
    விஜய் மக்கள் இயக்கம் - 169 பேரில் 110 பேர் வெற்றி

    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 169 பேரில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்று விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • 13:17 (IST) 13 Oct 2021
    கேரளா கொலை வழக்கு - கணவனுக்கு இரட்டை ஆயுள்

    கேரளாவில் மனைவியை பாம்பை ஏவி கொன்ற கணவர் குற்றவாளி என்று கொல்லம் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்த நிலையில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சூரஜ்க்கு ₨.5 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 13:15 (IST) 13 Oct 2021
    மதுரை - திருப்பதிக்கு தினமும் 2 விமான சேவைகள் - இண்டிகோ அறிவிப்பு

    நவம்பர் 19ம் தேதி முதல் மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினமும் 2 விமான சேவைகளைய் இயக்க இருப்பதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று இந்த நடவடிக்கை என அறிவிப்பு



  • 12:41 (IST) 13 Oct 2021
    weather update

    நீலகிரி,கோவை, ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:39 (IST) 13 Oct 2021
    அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - ராகுல் காந்தி

    லக்கீம்பூர் விவசாயிகள் படுகொலை காரணமாக அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.



  • 12:03 (IST) 13 Oct 2021
    மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

    9 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிமுக இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.



  • 11:42 (IST) 13 Oct 2021
    கடலூர் எம்.பி ரமேஷ்க்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்

    முந்திரி தொழிற்சாலை ஊழியர் கோவிந்தராஜ் கொலை வழக்கில் திமுக எம்.பி ரமேஷ்க்கு 1 நாள் சிபிசிஐடி காவல் விதித்து கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.



  • 11:10 (IST) 13 Oct 2021
    இன்று நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ சேவை

    சென்னை மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • 10:59 (IST) 13 Oct 2021
    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வி

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு ஒன்றிய வார்டை கூற பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. போட்டியிட்ட பல இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர்.



  • 10:36 (IST) 13 Oct 2021
    கடந்த 24 மணி நேரத்தில் 15,823 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 226 பேர் உயிரிழந்துள்ளார். தொற்று பாதிப்பிலிருந்து ஓரே நாளில் 22,844 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



  • 10:32 (IST) 13 Oct 2021
    கோயில் தங்கத்தை உருக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

    கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். சமயபுரம், இருக்கன்குடி, திருவேற்காடு ஆகிய கோயில்களில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.



  • 10:13 (IST) 13 Oct 2021
    ஆளுநரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர்

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ளார்.



  • 09:30 (IST) 13 Oct 2021
    திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி - முதல்வர் ஸ்டாலின்

    திமுக கூட்டணி பெற்ற மகத்தான வெற்றி 5 மாத திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. கொடுத்த வாக்குறுதியை திமுக காப்பாற்றுகிறது என்று மக்கள் நம்பி வாக்களித்துள்ளனர்; அவர்களின் நம்பிக்கையை காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 09:13 (IST) 13 Oct 2021
    ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜகவினர் சந்திப்பு

    தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். அப்போது,குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எம்பிக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இச்சந்திப்பின் போது, முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்



  • 09:07 (IST) 13 Oct 2021
    காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

    நடப்பாண்டில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



  • 08:53 (IST) 13 Oct 2021
    கூடுதல் தளர்வுகள்? முதல்வர் இன்று ஆலோசனை

    கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், வெள்ளி, சனி, ஞாயிறு நாள்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.



  • 08:42 (IST) 13 Oct 2021
    ஊராட்சி மன்றத் தலைவராகும் 90 வயது மூதாட்டி, 21 வயது பெண்

    திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றுள்ளார். அதே போல, தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21வயது பெண் சாருலதா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment