Tamil News Live updates : ஆப்கான் தலைநகர் காபூலில் 26/08/2021 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு. 60 ஆப்கானியர்கள் மற்றும் 13 அமெரிக்க ராணுவத்தினர் உயிரிழப்பு. ஆப்கான் ஆதரவு பெறும் இஸ்லாமிக் ஸ்டேட் கொரொசான் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ளது என்று அமெரிக்க ராணுவத்தினர் கூறுகின்றனர். இரண்டு தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் தாலிபான் படையினரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது தாலிபான்.
5வது நாளாக சிறுவர்களை தேடும் பணி நீட்டிப்பு
23ம் தேதி அன்று சென்னை மெரினாவில், கடலில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். அவர்களை தேடும் பணி இன்று 5வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, எண்ணூர், கோவளம் கடற்கரையில் சடலங்கள் ஒதுங்கியதா என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 93.52 ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று மேலும் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26.08 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு இன்று 21 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 34835 ஆக உயர்ந்துள்ளது.
டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுதிறனாளிகளுக்காக பாரா ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், பவினாபென் பட்டேல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுளளார். இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் 3ஆம் நாளில் உணவு இடைவேளை வரை இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போதுவரை இந்திய அணி 2வது இன்னிங்சில் இங்கிலாந்தை விட 320 ரன்கள் பின்தங்கியுள்ளது
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அசாம மாநிலத்தின் ஆளுநராக இருந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பட்டியலினத்தவரை அவதூறாக பேசியது தொடர்பாக வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
23ஆம் புலிகேசி – II பட விவகாரத்தில் சுமுகமாக தீர்வு காணப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் வடிவேலு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அழைத்து பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆகியுள்ளது. மேலும் அந்த அணி 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் ஷமி – 4, ஜடேஜா, சிராஜ், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்
தலைநகர் டெல்லியில் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மாஸ்டர்’ பட வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் காரைக்குடியில் தொடங்கியுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த சகுந்தலா என்ற பெண்ணுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து , நிரபராதி என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருச்சி தாத்தையங்கார் பேட்டையைச் சேர்ந்த சகுந்தலாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது சகுந்தலா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் சகுந்தலாவின் 1.5 வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திருச்சி கீழமை நீதிமன்றம் சகுந்தலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சகுந்தலா மேல்முறையீடு செய்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்பட்டவே சகுந்தலா உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்ற கிளைக்கு உத்தரவிட்டுள்ளது
இதன்படி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'இந்த வழக்கில் சின்ன சின்ன விஷயங்கள் கூட விசாரிக்கப்படவில்லை. சாட்சிகள் கூறிய தகவலின் அடிப்படையில் சகுந்தலாவுக்கு கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. எனவே சகுந்தலாவுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவரை நிரபாராதி' என தீர்ப்பு வழங்கியது. மேலும் அவரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தால் அதை திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் ஆக.30ஆம் தேதி முதல் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்குவதை முன்னிட்டு ஓ.எம்.ஆரில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வசூல் நிறுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சுங்கச்சாவடிகளில் வசூல் நிறுத்தப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை கூடுவாஞ்சேரி- மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைத்ததில் ரூ.1,886.40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் சாலை பணிகள் முறையாக நடைபெற்றதாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையினரின் கூடுதல் விசாரணைக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த அபினவ் ரவி என்பவர் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், போலீஸ் தாக்கல் செய்யும் ஆவணங்களை ஏற்பதா வேண்டாமா என்பதை நீலகிரி நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி தொடர்ந்த வழக்கை செப்.3ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருக்கிறது.
பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போல தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் நான்கு வழிச்சாலையை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும் என்று நெடுஞ்சாலைகள்& சிறுதுறைமுகங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கலைஞர் நூலகம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு ரூ.99 கோடியாக உயர்ந்துள்ளது என்று பொதுப்பணித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா விதத்திலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என்று புதுச்சேரி பட்ஜெட் குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
முகாம்களில் வாழ்ந்து வரும் தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என்று விதி எண் 110ன் கீழ் முதல் அமைச்சர் அறிவிப்பு. இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ. 108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் சட்டமன்றத்தில் முக ஸ்டாலின் அறிவிப்பு.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழக பாஜக எதிர்க்கும். தமிழக அரசுக்கு இந்த விவகாரத்தில் பாஜக துணை நிற்கும் என்று சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி பேச்சு
வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அமர வைக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் முகக்கவசங்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும். தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 44,658 ஆக உள்ளது. உயிரிழப்புகள் 496 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 32,988 ஆகும்.
இன்று தமிழக சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் எ.வ.வேலு வெளியிடுவார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 5.72 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி போட்ட மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
நேற்று நடைபெற்ற காபூல் குண்டு வெடிப்பில் பலியான அமெரிக்க படை வீரர்களுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் ஆகஸ்ட் 30 வரை அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கோவிஷீல்ட் 2 டோஸ்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் திட்டமில்லை என்றும் 84 நாட்களாகவே இருக்கும் என்றும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதிவாந்த நபர்களில் 50% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2020 நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் மற்றும் 2021 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.