Advertisment

Tamil News Highlights: உ.பி அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் பலி

Tamil News Updates; அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UP hosp

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.80-க்கும், டீசல், ரூ92.39-க்கும், கேஸ், ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

சென்னை குடிநீர் ஏரிகளில் 44.02% நீர் இருப்பு சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 44.02% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 5.175 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.

  • Nov 15, 2024 21:47 IST
    தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது உறுதி - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஐகோர்ட்டில் அறிக்கை

    தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது உறுதி ஆய்வில் உறுதியானது; ஆற்று மண்ணை சோதித்ததில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கலந்திருந்தது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.



  • Nov 15, 2024 21:46 IST
    உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் காலணி நிறுவனத்துக்கு ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை  - அண்ணாமலை  

    பா.ஜ.கா மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “2023-ல் உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் தைவானைச் சேர்ந்த காலணி நிறுவனம் ரூ.2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தி.மு.க அரசு அறிவித்தது. சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது” என்று விமர்சித்துள்ளார்.



  • Nov 15, 2024 20:19 IST
    பிர்சா முண்டாவின் தியாகம் ஆவணமாக்கப்படவில்லை - ஆளுநர் ஆர்.என். ரவி

    சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் பெருமைநாள் கொண்டாட்டத்தில் ஆளுநர் அர்.என். ரவி பேச்சு: “பிர்சா முண்டாவைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்புவரை யாருக்கும் தெரியவில்லை; பிர்சா முண்டாவின் தியாகம் ஆவணமாக்கப்படவில்லை. பழங்குடியினர் மக்களை வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினர். பிரதமர் மோடி வந்தபிறகுதான் இந்த நிலை மாறத் தொடங்கியது.” என்று கூறினார்.



  • Nov 15, 2024 19:06 IST
    போதைப்பொருள்: காவல்துறை நடவடிக்கையை கண்காணிக்க சிறப்புக்குழு - ஐகோர்ட் உத்தரவு 

    போதைப்பொருள் நடவடிக்கையைக் கட்டுபடுத்தும் காவல்துறையின் நடவடிக்கையை கண்காணிக்க சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Nov 15, 2024 18:56 IST
    கங்குவா படத்தின் இசையின் இரைச்சல் குறைப்பு

    கங்குவா படத்தின் பின்னணி இசையில் இரைச்சல் மிக அதிகம் என கடுமையான விமர்சனங்களால் இசையின் இரைச்சல் குறைக்கப்பட்டுள்ளது



  • Nov 15, 2024 18:47 IST
    எலி மருந்து விவகாரம்; இயல்பு நிலைக்கு திரும்பிய பெற்றோர்

    சென்னை குன்றத்தூரில் எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், குழந்தைகளின் பெற்றோர் அபாய கட்டத்தில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது



  • Nov 15, 2024 18:25 IST
    கொடநாடு வழக்கு – இ.பி.எஸ்-ஐ ஏன் விசாரிக்க கூடாது? ஐகோர்ட் கேள்வி

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமியை ஏன் விசாரிக்க கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது



  • Nov 15, 2024 18:13 IST
    கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடன் பேச வேண்டும்; சி.வி.சண்முகத்துக்கு ஐகோர்ட் அறிவுரை

    ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது



  • Nov 15, 2024 17:50 IST
    கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் - துரைமுருகன்

    என்னை கொலை செய்ய வந்தாலும் நான் மன்னிப்பேன்.. ஆனால், கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன் என காட்பாடியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக பேசினார்



  • Nov 15, 2024 17:33 IST
    தமிழ்நாடு பா.ஜ.க.,வில் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை - சுதாகர் ரெட்டி

    தமிழ்நாடு பா.ஜ.க.,வில் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை. பா.ஜ.க தலைமை, மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி கூட்டணி குறித்து முடிவெடுக்கும் மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்



  • Nov 15, 2024 17:31 IST
    16 வயது சிறுவனை வெட்டிய 17 வயது சிறுவன்

    நெல்லையில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் 16 வயது சிறுவனை 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் போது குறுக்கே வந்த மூதாட்டிக்கும் வெட்டு விழுந்தது



  • Nov 15, 2024 17:04 IST
    'மதவாத சக்திகள்தான் விஷ பாம்பு' - விஜய்க்கு துரை வைகோ அட்வைஸ் 

    சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "விஜய் சினிமா வானில் ஜொலிக்கும் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் என்பது ஒரு கடினமான உலகம். நான் அரசியலுக்கு வரும்போது 'நச்சு நிறைந்த அரசியல்' என்று சொன்னதுபோலவே, விஜய்யும் அரசியலை 'விஷ பாம்பு' என்று சொல்லியிருக்கிறார்.

    விஷ பாம்பு என்பது மதவாத சக்திகள்தான் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேறூன்றக் கூடாது. அதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது தெரியாமலோ விஜய் துணை போய் விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் படித்தவர், விவரமானவர். கண்டிப்பாக நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்." என்று கூறியுள்ளார். 



  • Nov 15, 2024 17:01 IST
    பிரதமரின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

    தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஜார்க்கண்ட் சென்றுள்ள பிரதமரின் விமானத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. தியோகர் விமான நிலையத்திலேயே விமானத்தை நிறுத்திவைக்க வேண்டிய சூழல் - இதனால், பிரதமர் மோடி டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. 



  • Nov 15, 2024 16:58 IST
    கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பேருந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

    கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப் பார்த்து நாடக குழுவினர் சென்ற பேருந்து விபத்துகுள்ளானது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடனப்பள்ளியில் நாடகத்தை முடித்து விட்டு சுல்தான் பத்தேரி என்ற இடத்துக்கு கூகுள் மேப் மூலம் பயணம் செய்துள்ளனர். குறுகலான சாலையில் சென்றபோது பேருந்து கவிழ்ந்தது.



  • Nov 15, 2024 16:57 IST
    சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

    சென்னையில் நேற்று கடத்தப்பட்ட ஒன்றரை மாத குழந்தை திருவேற்காட்டில் மீட்கப்பட்டது. சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த நிஷாந்தி என்பவரின் ஆண் குழந்தையை நேற்று பெண் ஒருவர் கடத்திச் சென்றார். அரசின் நிதியுதவி பெற்றுத் தருவதாக குழந்தையுடன் தாய் நிஷாந்தியை தியாகராயர் நகர் ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். ஓட்டலில் நிஷாந்தி கைகழுவச் சென்றபோது குழந்தையை பெண் கடத்திச் சென்றனர்.



  • Nov 15, 2024 16:39 IST
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நடை திறப்பு

    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாலை 5 மணிக்கு பதில் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக 4 மணிக்கு திறக்கப்பட உள்ளது. 30,000 பேர் முன்பதிவு செய்துள்ள காரணத்தால் மாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது. பம்பையில் இருந்து மதியம் 1 மணி அளவில் சன்னிதானம் செல்வதற்கு முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.



  • Nov 15, 2024 16:19 IST
    புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனை 

    புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு காவல் துறை  சம்பந்தமான ஆலோசனை கூட்டம் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம்  தலைமையில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி டி.ஜி.பி ஷாலினி சிங், ஐ.ஜி அஜித்குமார் சிங்லா மற்றும் காவல் துறை செயலர் கேசவன் ஆகியோர் பங்கேற்றனர். 

     இக்கூட்டத்தில் வரும் ஆங்கில புத்தாண்டு அன்று  பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்துவது போக்குவரத்து மாற்றங்கள், சட்டம் ஒழுங்கு சுற்றுலா பயணிகளுக்கு பொதுமக்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்துவது சம்பந்தமாகவும் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

     



  • Nov 15, 2024 15:40 IST
    'கூட்டணி குறித்து தேசியத் தலைமை தான் முடிவெடுக்கும்'  - சுதாகர் ரெட்டி கருத்து

    "2026 தேர்தலில் பாஜக கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவிக்க நிர்வாகிகள் யாருக்கும் அதிகாரம் இல்லை. கூட்டணி குறித்து தேசியத் தலைமை, அதற்குரிய நேரத்தில் முடிவெடுக்கும். தற்போது, ஒரு சிலர் பாஜகவின் ஒற்றுமையை சீர்குலைக் முயற்சிக்கிறார்கள்" என்று  தமிழ்நாடு பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். 



  • Nov 15, 2024 15:31 IST
    மேம்பாலத்திலிருந்து கீழே குதிக்கும் சிவகார்த்திகேயன் - போக்குவரத்து பாதிப்பு 

    சென்னை தாம்பரத்தை அடுத்த சதானந்தபுரம் பகுதியில், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

    மேம்பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் கீழே குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்றுகொண்டு ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 



  • Nov 15, 2024 15:29 IST
    சென்னையில் 10 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து - பயணிகள் கடும் அவதி 

    சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னையிலிருந்து புறப்படும் 5 விமானங்கள் மற்றும் வந்து சேர வேண்டிய 5 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.பெங்களூரு, திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொல்கத்தா, சிலிகுரியிலிருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்து பயணிக்க இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



  • Nov 15, 2024 14:56 IST
    யானை தந்தத்தாலான யானை பொம்மைகள் பறிமுதல்

    விழுப்புரத்தில் விற்பனை செய்யப்பட்ட யானை தந்தத்தாலான யானை பொம்மைகள் பறிமுதல் செய்த நிலையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இனி இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை தொடரும் எனவும் அமைச்சர் பொன்முடி உறுதி செய்துள்ளார்.



  • Nov 15, 2024 14:36 IST
    இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் திசநாயக்க கூட்டணி அமோக வெற்றி

    இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 61.56% வாக்குகளை பெற்று 141 இடங்களைக் கைப்பற்றி அதிபர் அநுர குமார திசநாயக்க கூட்டணியான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.



  • Nov 15, 2024 14:33 IST
    அரியலூரில் முதலமைச்சர் பேச்சு

    "அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என ஓய்வெடுக்கப் போகிறவன் நான் இல்லை" என அரியலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 



  • Nov 15, 2024 14:14 IST
    அதிமுகவுக்கு முதலமைச்சர் கேள்வி

    அதிமுக ஆட்சியின் முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? - என அரியலூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். 



  • Nov 15, 2024 13:25 IST
    தி.மு.க , அ.தி.மு.க நல்லது செய்யும் எண்ணமில்லை - உயர் நீதிமன்றம்

    தி.மு.க வும் அ.தி.மு.கவும் மாறி மாறி குறை கூறுகின்றதே தவிற நாட்டுக்கு நல்லது செய்ய்ம் எண்ணமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.



  • Nov 15, 2024 13:09 IST
    பெரம்பலூரில் வெங்காய விற்பனை மையம்

    வெங்காய உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய வெங்காய விற்பனை மையம் அமைக்கப்படும் என அரியலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 



  • Nov 15, 2024 13:03 IST
    53 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல்

    அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் .



  • Nov 15, 2024 12:48 IST
    வங்கியின் பூட்டு உடைப்பு - அதிர்ச்சி

    சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரேயுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Nov 15, 2024 12:25 IST
    மது பாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களுக்கு, டிஜிட்டல் முறையில் பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இரு மாவட்டங்களையும் சேர்த்து 220 கடைகளில் பில் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.



  • Nov 15, 2024 11:57 IST
    "எல்லோரும் எம்.ஜி.ஆர்-ஆக முடியாது": அமைச்சர் ரகுபதி

    எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகி விட முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய், எம்.ஜி.ஆர் பாணியை பின்பற்ற பார்க்கிறார் எனவும், அது ஒரு போதும் நடைபெறாது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.



  • Nov 15, 2024 11:24 IST
    ஐயப்ப பக்தர்களுக்காக செயலி அறிமுகம்

    சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக Swami Chatbot என்ற செயலியை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. பூஜை நேரம், போக்குவரத்து வசதி குறித்து இந்த செயலியில் தெரிந்து கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பத்துடன் இந்த செயலி, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 15, 2024 10:27 IST
    நோயாளி உயிரிழப்பு - உறவினர்கள் வாக்குவாதம் 

    சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் பித்தப்பை கல் பிரச்சினைக்காக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மரணமடைந்ததால் அவரது மரணத்திற்கு, மருத்துவர்களே காரணம் எனக் கூறி உறவினர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.



  • Nov 15, 2024 10:22 IST
    ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்

    ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 130 ஏக்கரில் இந்த சிப்காட் தொழிற்பேட்டை அமைகிறது. ரூ1,000 கோடி முதலீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் காலணி தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.



  • Nov 15, 2024 10:21 IST
    அரியலூரில் கலைஞர் சிலையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவசங்கர், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.



  • Nov 15, 2024 09:54 IST
    வீட்டில் எலி தொல்லைக்கு வைத்த மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலி

    சென்னை குன்றத்தூரில் தனியார் வங்கி மேலாளரின் வீட்டில் எலி தொல்லைக்கு வைத்த மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலி. அதே பாதிப்பில் பெற்றோர் இருவரும் சிகிச்சையில் இருப்பதால், குழந்தைகள் இறந்ததை இன்னும் தெரிவிக்க முடியவில்லை. இதனால் உடற்கூறாய்வு செய்வதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது.



  • Nov 15, 2024 09:22 IST
    லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை 

    பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை துடியலூரில் உள்ள வீடு அலுவலகம் மற்றும் ஹோமியோபதி கல்லூரியில் மத்திய போலீசாரின் பாதுகாப்புடன் சோதனை  நடைபெறுகிறது. சென்னையிலும் போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நீடிக்கிறது. விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களிலும் 2வது நாளாக அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே, மார்ட்டினுக்கு தொடர்புடைய ரூ.451 கோடி சொத்துகளை முடக்கிய நிலையில்  விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈட்டியது தொடர்பாக வருமான வரித்துறையினர் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.



  • Nov 15, 2024 09:18 IST
    அரசு நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் 2 மாவட்டங்களில் ஆய்வு

    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்டங்கள் சென்றுள்ளதா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயங்கொண்டம் பகுதியில் காலணி தொழிற்சாலை பணிகளை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு முடிவுறா பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.



  • Nov 15, 2024 09:15 IST
    மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் அதிகபட்ச மழை பதிவு

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஊத்து பகுதியில் 10 செ.மீ மழை அளவு பதிவு.நாலுமுக்கு பகுதியில் 9.6 செ.மீ மழை அளவும், காக்காச்சி பகுதியில் 8.7 செ.மீ. மழையளவும், பதிவாகியுள்ளது.



  • Nov 15, 2024 08:50 IST
    நவம்பர் 22-ந் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், வரும் நவம்பர் 22-ந் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Nov 15, 2024 08:47 IST
    மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை திறப்பு

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக இன்று 5 மாலை மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தினசரி 80,000 பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். தினமும் 18 மணிநேரம் நடை திறந்திருக்கும். 



  • Nov 15, 2024 08:45 IST
    என்.எல்.சி. முதல் அனல் மின் நிலையம் இடிக்கும் பணி  துவக்கம்

    என்.எல்.சி.யில் முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொ்டங்கியுள்ளது. 1962ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த முதலாவது அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கக் கூடாது என்பது உலக நியதியின் காரணமாக இதற்கு 25 ஆண்டு காலக்கெடு நிர்ணயம் செய்து, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு இயங்கி வந்தது. தற்போது அனல்மின் நிலையத்தின் ஆயுள் முடிந்ததால் அதனை இடிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.  52 ஆண்டுகளாக என்எல்சியின் அடையாளமாக முதலாவது அனல் மின் நிலையம் ஜெர்மன், ரஷ்ய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



  • Nov 15, 2024 08:16 IST
    டெஸ்ட் போட்டிகளில் இருந்து டீம் சௌதி ஓய்வு

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் டீம் சௌதி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 385 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர், அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.



  • Nov 15, 2024 08:14 IST
    நியூசிலாந்தில் மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு! 

    நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கான வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பழங்குடியினர் சமூகத்தைத் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பியதால், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன. நியூசிலாந்து மக்கள் தொகையில் 20 சதவீதம் கொண்ட மாவோரி மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் முயற்சி நடப்பதாக மாவோரி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.



  • Nov 15, 2024 08:10 IST
    தொடரை கைப்பற்றுமா இந்தியா?

    இந்திய தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை முடிந்த 3 போட்டிகளில் இந்திய 2-1 என்ற கண்க்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



  • Nov 15, 2024 08:03 IST
    கனமழை - ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு 

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியில் இருந்து 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு அதிகரிப்பு தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



  • Nov 15, 2024 08:00 IST
    21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு 

    தமிழகத்தில் காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில், அரியலூர், திருச்சி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Nov 15, 2024 07:35 IST
    இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி முன்னிலை

    இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயக்காவின் என்.பி.பி கட்சி 60 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில் 196 பேர் தேர்தலிலும், 29 பேர் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய பட்டியல் என்பது அங்கீகாரம் பெற்ற கட்சியின் வாக்கு சதவீதத்தை வைத்து 29 இடங்கள் பகிர்ந்து அளிக்கப்படும்.



  • Nov 15, 2024 07:32 IST
    சென்னையில் காவல்துறை சார்பில் பொது மக்கள் குறைதீர் முகாம்

    சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்டக் காவல் துணை ஆணையர் கூத்தலிங்கம் தலைமையில் பொது மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. மொத்தம் 70 மனுக்கள் பெற்பட்ட நிலையில் 35 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டது. மீதமுள்ள 35 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • Nov 15, 2024 07:28 IST
    டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி அபார வெற்றி

    டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 265 வாக்குகள் பதிவான நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு 133 வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு 130 வாக்குகளும் கிடைத்தது. 2 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் மகேஷ்குமார் கிச்சி 5 மாதங்களுக்கு டெலலி மேயராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 15, 2024 07:26 IST
    சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

    3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2403 மில்லியன் கன அடியாக உள்ளது. நேற்று 298 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 242 கனஅடியாக சரிவு சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 115 மில்லியன் கனஅடியாக உள்ளது. நேற்று 69 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 35 கனஅடியாக சரிவு. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரி 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 303 மில்லியன் கனஅடியாக உள்ளது. மீண்டும் 15 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.  சென்னை குடிநீர் ஏரிகளில் 44.02% நீர் இருப்பு சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 44.02% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 5.175 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.



Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment