Tamilnadu News Update : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் பள்ளிப் பைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களில் முதலமைச்சர்கள் மற்றும் பிற அரசியல் செயல்பாட்டாளர்களின் புகைப்படங்களை அச்சிடுவதை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு உத்தரவிடக் கோரி நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி டி ஆதிகேசவலு அடங்கிய பெஞ்ச், இந்த உத்தரவை பிறப்பித்தது.
மேலும் வாக்களிக்கும் உரிமை இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும், பாட புத்தகங்கள், பேக்குகள் மற்றும் இதர பொருட்களில், மாநிலத்தின் முதல்வர் மற்றும் பிற அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை எடுத்துச் செல்வது வெறுக்கத்தக்கது என்றும், இந்த மாதிரி தலைவர்களின் புகைப்படங்களை அச்சிடுவதற்கு பொது நிதியை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் மாநில அரசை கேட்டுக்கொண்ட நீதி மன்றம், "இதுபோன்ற நடைமுறை எதிர்காலத்தில் தொடராது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுகவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த பேக்குகள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களுடன் இருந்தது. அந்த புகைப்படங்களை மாற்றாமல் மாணவர்களுக்கு விநியோகிக்குமாறு பள்ளிக்கல்வித் துறையை முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது.
பேக்குகளில் புகைப்படங்களை மாற்றுவது கருவூலத்திற்கு 13 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர்கள் புகைப்படத்துடன் விநியோகிக்க அனுமதி அளித்துள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் முதல்வரின் புகைப்படங்களை அச்சிடும் நடைமுறையையும் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஒழித்துள்ளார்.
மேலும் ஆட்சிக்கு வந்த உடன் மக்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிதியான ரூ .4,000 ஐ வழங்க விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட டோக்கன்கள் மற்றும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட 14 மளிகை பொருட்கள் அடங்கிய பையில் கூட முதல்வரின் புகைப்படம் இல்லை.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும்போது அரசியல் கட்சிகள் தங்கள் தலைவர்களின் புகைப்படங்களை பள்ளி பேக்குகள் மற்றும் சான்றிதழ்களில் அச்சிடுவது ஆட்சியளர்களின் வழக்கமான அதிகாரமாக இருந்தது. தற்போது இந்த செயல்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.