மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில உள்ள இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருவதை தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆளும் அதிமுக தரப்பில் இருந்து சில அமைச்சர்கள் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை கடந்த 31-ந்தேதி அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக தொடங்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில், பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளித்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் கூட்டணியில் போட்டியிடும் தொகுதி குறைந்தால் கூட இடஒதுக்கீடு விஷயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கூட்டணி குறித்து பேச சென்ற அதிமுக அமைச்சர்கள் பிப்ரவரி 3-ந் தேதி இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து அன்றைய தினமே பாமக பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய அக்கட்சியின் தலைவர், பிப்ரவரி 3-ந் தேதி இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்தே வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பாமக முடிவு அறிவிக்கப்படும் என்றும், இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் , அதிமுகவுடன் கூட்டணி தொடருமா அல்லது வேறு கட்சியுடன் கூட்டணியா என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து இந்த இடஒதுக்கீடு தொடர்பாக பாமக தலைவர் ஜி கே மணி தலைமையிலான பாமக கட்சியினர், அமைச்சர் பி தங்கமணியின் இல்லத்திற்கு சென்று சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அமைச்சர்கள், எஸ் பி வேலுமணி, சி.வி சண்முகம், கே பி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றே தெரிகிறது. மேலும் இரு கட்சிகளின் தலைவர்களும் இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டன்ற தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல்களுக்கு முன்னதாக அதிமுக அரசு இந்த இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை கொண்டுவர தயாராக இல்லை என்றும், சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் குறித்து அளவிடக்கூடிய தகவல்களை சேகரிப்பதற்காக டிசம்பரில் அமைக்கப்பட்ட நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் சார்பில் கூறப்படுகிறது. ஆனால் இடஒதுக்கீட்டில் இருந்து பின்வாங்காத பாமக கடந்த காலங்களில் அருந்தாதியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் துணை ஒதுக்கீடு கொடுத்ததை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் பாமகவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், மற்ற சமூகத்தினரும் இதேபோல் கோரிக்கைளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது. மேலும் தேர்தல் சமயத்தில் இந்த இடஒதுக்கீடு வழங்கினால்," ஆளும் கட்சிக்கு அதிக பின்னடைவு ஏற்படும் என்று மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளாா. தற்போது அதிமுகவின் கூட்டணி கட்சியாக இருக்கும் தேமுதிக, வன்னியர்களுக்கான பிரத்யேக ஒதுக்கீட்டிற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் மற்ற மாநிலங்களில் நடந்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், மராட்டிய மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியில், மராட்டியர்களுக்காக 16% ஒதுக்கீட்டை நீட்டித்தது குறித்து தெரிவித்துள்ளார். மேலும் கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் பின்பற்றும் பகுப்பாய்வு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சுட்டிக்காட்டி, அதை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"