Tamilnadu School Reopening : கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் தடை செய்யப்பட்ட நிலையில், போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவினால், பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
இதே நடைமுறை இந்தியாவிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பின்பற்றப்பட்டதால், சொந்த இடத்தில் இருந்து பணி காரணமாக வெளிமாநிலங்களுக்கு மற்றும் வெளிநாடு சென்ற தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் கல்வி பாதிப்பை ஈடு செய்யும் விதமாக தமிழக அரசு சார்பில், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் வீட்ட்டில் இருந்தபடியே தங்களது பாடத்திட்டங்களை ஆன்லைன் மூலம் படித்து வந்தனர். மேலும் பள்ளிகள் திறக்கப்படாததால் அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறையத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டு பள்ளிகள் திறப்பது தொடர்பாக மாநில அரசே முடிவு செய்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து ஒருசில மாநிலங்களில் கொரோனா தடுப்பு விதிகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் ஒரு சில நாட்களில் ஆசிரியர் மாணவர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், அத்துடன் பள்ளிகள் அடைக்கப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் தமிழக அரசு பள்ளிகள் திறப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஊரடங்கு குறித்து அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்தது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வரிடம் பேசி விரைவில் முடிவு செய்ப்படும் என தெரிவித்திருந்தார். அடுத்து ஜனவரி மாத ஊரடங்கு உத்தரவை அறிவித்த தமிழக அரசு ஜனவரி 19-ந் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா விதிமுறை குறித்து விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்றும், ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பள்ளிக்கு மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும், இருமல் மற்றும் காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அறிவித்த தமிழக அரசு இதில் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 8-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் அனைத்திலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள சில தளர்வுகள் :
பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி
வரும் 8 ஆம் தேதி முதல் இளங்கலை, முதுகலை அனைத்து வகுப்புகளுக்கும் கல்லூரிகள் திறப்பு
பெட்ரோல் நிலையங்களுக்கான நேரக்கட்டுப்பாட்டு நீக்கம்
விளையாட்டு நிகழ்ச்சிகள் 50 சதவீத இருக்கைகளுடன் நடத்தலாம்
கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்புகள் செயல்படும்.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் தளர்வுகளுக்கு அனுமதி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.