Tamil Nadu News Updates: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 3,119 மையங்களில் 8.85 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 34வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ100.94-க்கும் விற்பனை
‘அசானி’ தீவிர புயல் 24 மணி நேரத்தில் வலுவிழக்கிறது
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மகப்பேறு விடுப்பு – அரசு விளக்கம்
குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் அரசு ஊழியர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுமுறை உண்டு. சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்
மகிந்த ராஜபக்சவின் ராஜினாமா ஏற்பு
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக அதிபர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை நாளை மறுநாள் காலை 7 மணி வரை நீட்டித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஹஃபீஸ் நசீர் அஹமதுவின் எராவூரில் உள்ள அலுவலகத்துக்கு போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது.
டெல்லி, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.
இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படையினருக்கு அனுமதி வழங்கி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. தனிநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீதும்
துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நடந்த வன்முறையில் இதுவரை 38 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 65 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அரசியல் சார்பு பேதமின்றி, குடிமக்களுக்கு எதிரான வன்முறை அல்லது பழிவாங்கும் செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் அனைவரும் அமைதி காக்குமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கின்றேன் என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
இலங்கையில் 2வது நாளாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகினால், இலங்கையில் ஆட்சி அமைக்கத் தயார் என்று பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார்.
இலங்கையை விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மகிந்த ராஜபக்சே விலகமாட்டார். அதேநேரம் புதிய பிரதமரை தேர்வு செய்வதில் மகிந்த ராஜபக்சே முக்கிய பங்கு வகிப்பார் என நமல் ராஜபக்சே கூறியுள்ளார்
தேசத்துரோக வழக்கின் சட்டப்பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மறுபரிசீலனை செய்யும் பணியை 3 – 4 மாதங்களில் முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அதேநேரம் மறுபரிசீலனை செய்யும் வரை வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது
இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். மேலும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
ஒடிசா மாநிலம் சத்தர்பூரில் அசானி புயலால் பயங்கர கடல் சீற்றத்துடன் கனமழை பெய்து வருகிறது. இந்தக் கடல் சீற்றத்தில் சிக்கி மீனவ படகு கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அசானி புயலால் துறைமுக செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
தலிபான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கிற்கு 2022க்கான புலிட்சர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் கோரமுகத்தை படம்பிடித்து காண்பித்திருந்தார் டேனிஷ்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். பேரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டது ; மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மேலநீலிதநல்லூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதி முழுதும் பரபரப்பாக்கியுள்ளது. கல்லூரி முதல்வரின் புகாரால், மாணவர்கள் 10 பேரின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்திய அந்த 10 மாணவர்கள் கல்லூரி கட்டடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக, 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் போராட்டம் நடத்தினர்.
மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அசானி புயல் முன்னெச்சரிக்கையாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
“ஏழைகளுக்குச் சொந்தமான நாட்டின் வளங்களை சில குறிப்பிட்ட பணக்காரர்களுக்கு பிரதமர் மோடி வழங்கி வருகிறார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும். இந்தியாவில் கொரோனாவால் 60 லட்சம் பேர் வரை இறந்திருப்பார்கள்; உண்மையான எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது.” என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பேசியுள்ளார்.
இலங்கையில் 58 சிறைக் கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் கைதிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் நிலையில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்தது. இது நேற்றைய தினம் வன்முறையாக மாறியது. இதனால் நாடு முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை தலைநகர் கொழும்புவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள ஆளும் கட்டியின் உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரைக்கப்பட்டன.
இதற்கிடையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று மாலை தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் நமல் ராஜபக்சேவின் மனைவி தப்பியோடும் காட்சி வெளியாகியுள்ளது. மேலும் ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் இருப்பதாகவும் அவர்கள் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Who do you think this is? Still using tax payers money to get away also i guess. Shameful…!!! Actually මුන්ගේ ලැජ්ජ නහර නෑ #gohomegota #gohomerajapaksas #srilanka #srilankacrisis pic.twitter.com/xdbC5DbgkS
— Chamith Wijesundera (@chamithwije) May 10, 2022
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காவல்துறை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் கம்பீரமான துறையாக மாறியுள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். பாலியல் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.- மு.க.ஸ்டாலின்
காவல் நிலைய மரணங்கள் எந்த ஆட்சியில் நடந்தாலும் நியாயப்படுத்த முடியாது. திமுக அரசு எப்போதும், எதையும் மறைக்க முயல்வதில்லை. இனி வரும் காலங்களில் காவல் நிலைய மரணங்களே இல்லாத நிலை ஏற்படும் – மு.க.ஸ்டாலின்
கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கூலிப்படைகள் விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும். எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை. சமூக வலைதளங்களில் வன்முறை பேச்சுக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்- மு.க.ஸ்டாலின்!
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும். காவல்துறையினர் விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் பணி செய்ய வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்!
உள்துறை சரியாக செயல்பட்டால், மற்ற துறைகளும் சரியாக செயல்படும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி சரியாக இருக்கும். திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லை. காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும்- உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை!
சென்னை, ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க தடை விதிக்க போவதில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முதல்வரின் அறிக்கை இருக்குமென்றால் அது பயன் அளிக்காது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நீர்த்துப் போக செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. மாற்று இடத்தில் குடியிருப்புக்கான கடிதங்களை மனுதாரர்கள் முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும்- நீதிபதிகள்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டத்தின்படி, சென்னையில் வார்டுக்கு ஒரு மருத்துவமனை என 200 மருத்துவமனைகள் அமைக்கப்படும்; இதன் மூலம் பெரிய மருத்துவமனைகளில் மக்கள் அதிகளவில் வருவதை தவிர்க்க முடியும் – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
மத்தியப்பிரதேச மாநில உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கில், பொதுப்பிரிவினருக்கான வார்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்த எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏப்ரலில் 17 நாட்களும், மே 9 வரை உச்சபட்ச மின் தேவை 16,000 மெகா வாட் எந்த பிரச்னையும் இன்றி கொடுக்கப்பட்டது. மே 1-8 வரை 5,94,000 யூனிட் மின்சாரம், ரூ. 12 என்ற அளவில் எக்ஸ்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து மின் தேவை சரிசெய்யப்பட்டது என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு . அசானி புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் விசாகப்பட்டின புயல் எச்சரிக்கை மையம் அறிவிப்பு
மறைந்த புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் உள்பட 4 இந்தியர்களுக்கு புலிட்சர் விருது அறிவிப்பு. ரோஹிங்கியா அகதிகளின் நிலையை படம்பிடித்துக்காட்டியதற்காக டேனிஷ் சித்திக்கிற்கு ஏற்கனவே புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும். மேலும், கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்தியாவில் மேலும் 2,288 பேருக்கு கொரோனா தொற்று.10 பேர் உயிரிழப்பு. கொரோனாவில் இருந்து மேலும் 3,044 பேர் குணமடைந்தனர். கொரோனாவுக்கு 19,637 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சட்டம், ஒழுங்கை பராமரிக்கத் தவறியது ஏன் என விளக்கம் கேட்டு காவல் துறைக்கும், ராணுவத்திற்கும் மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மே 12 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ152 குறைந்து ரூ38,720க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ4,840க்கு விற்பனை
தென் கொரியாவின் புதிய அதிபராக யூன் சுக்-யியோல் பதவியேற்பு. அணு ஆயுதங்களை முழுவதுமாக வடகொரியா கைவிட வேண்டும் என பேச்சு
சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூா் செல்லும் 10 விமானங்கள் ரத்து . அசானி புயல் எச்சரிக்கை காரணமாக விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு குறித்த சிறப்பு மலரையும் ஸ்டாலின் வெளியிட்டார்.
சேலத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 19 ஓட்டல்களில் இருந்து 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல். 8 கடைகளுக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு
இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையை விட்டு வெளியேறினார். வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை ராணுவம் அப்புறப்படுத்தியதை அடுத்த மகிந்த ராஜபக்ச வெளியேறினார்.
இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை நீட்டிப்பு. பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் நீட்டிப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, வேலூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.